தமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்த சிவாஜி, அரசியலில், தோற்றுப்போனவர் என்ற பெயர் பெற்றிருந்தாலும், தனக்கு அரசியல் தெரியாது என்று பலரும் விமர்சித்தபோது கண்ணதாசன் துணையுடன் அவர்களுக்கு பதிலடி கொடுத்தவர் தான் சிவாஜி என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவரின் படங்கள் வெற்றி பெற்றது போல், அரசியலில், தி.மு.க.வில் இவருக்கான செல்வாக்கும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தி.முக. சித்தாந்தங்களை மீறி கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளார் சிவாஜி.
இதன் காரணமாக தி.மு.க.வில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அவர், கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கண்ணதாசனும் அவருடன் வெளியேறியதால், தி.மு.க.வில் இருந்து அவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக சிவாஜி குறித்து தொடர்ந்து விமர்சித்த தி.மு.க.வினர் சிவாஜிக்கு அரசியலே தெரியாது என்று பல மேடைகளில் கூறியிருந்தனர்.
பொதுவாக தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க விரும்பாத சிவாஜி, தன் மனம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் மட்டுமே பதில் கொடுப்பார். அந்த வகையில் தனக்கு அரசியல் தெரியாது என்று கூறிய தி.மு.க.வினருக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று நினைத்த சிவாஜி, ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரு அரசியல் காட்சிக்கா, கண்ணதாசனை சந்தித்து அரசியல் காட்சி என்று சொல்லுங்கள் அவர் எழுதி தருவார் என்று கூறியுள்ளார்.
அதன்படி கண்ணதாசனை சந்திக்க, அவர் அண்ணா எழுதிய நாடகமான சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தின் ஒரு காட்சியை ஐடியாவாக எடுத்துக்கொண்டு வசனம் எழுதலாம் என்று கண்ணதாசன் சொல்கிறார். ஆனால் அண்ணா எழுதிய அந்த நாடக புத்தகம் கிடைக்கவே இல்லை. ஆனாலும் அண்ணாவுக்காக பலமுறை இந்த நாடகத்தை பார்த்திருந்த கண்ணதாசன், அதை மனதில் வைத்துக்கொண்டு சொந்தமாக வசனங்களை எழுதி கொடுத்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் வசனங்களை படித்து பார்த்த சிவாஜி இதில் என்ன எழுதியிருக்கிறார் எனக்கு ஒன்றும் புரியவில்லை. படமாக்கும்போது கண்ணதாசன் இங்கே வரட்டும் என்று கூறியுள்ளார். அதன்படி கண்ணதாசன் சொல்லிக்கொடுத்து சிவாஜி நடித்த ‘’நான் அரசியல் அறியாதவனா’’ என்று தொடங்கிய அந்த காட்சி தியேட்டரில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இதை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க.வினர் இது அண்ணா எழுதிய வசனம் என்று கூறியுள்ளனர்.
நான் எழுதிய வசனம் அண்ணா எழுதியது என்றால் அது எனக்குத்தான் பெருமை என்று நினைத்து கண்ணதாசன் இதற்கு பதில் கூறாமல் விட்டுவிட்டார் என்று அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.