குழந்தை நட்சத்திரமாக நாடகத்தில் அறிமுகமான எம்.ஜி.ஆர் பல இன்னல்களை சந்தித்த நிலையில், உண்மையிலேயே அடி தாங்க முடியாமல் அழுதபோது, அவர் நடிக்கிறார் என்று பலரும் பாராட்டியுள்ளனர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியில், கேரளாவில் நீதிபதியாக பதவியில் இருந்து கோபால் மேனன் என்பவர் மிகவும் நேர்மையான ஒருவராக இருந்துள்ளார். இதனால், அவருக்கு பல சோதனைகள் வர, ஒரு கட்டத்தில் இந்த வேலையே வேண்டாம் என்று விட்டுவிட்டு, கல்லூரி பேராசிரியராக இலங்கையில் சில ஆண்டுகள் அவர் வேலை செய்து வந்தபோது, 1917-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பிறக்கிறார்.
அவருக்கு இரண்டரை வயது ஆகும்போது, தந்தை கோபால் மேனன் இறந்து போகிறார். தந்தை கோபால் மேனன் இறந்த சோகத்தில், எம்.ஜி.ஆரின் மூத்த அண்ணன், இரண்டு அக்கா என 3 பேரும் மரணமடைந்து விடுகின்றனர். இதன் காரணமாக சத்தியபாமா மகன்கள் சக்ரபாணி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருடனும் கடுமையாக வறுமையில் போராடிக்கொண்டிருக்கிறார்.
இந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரின் அப்பா கோபால் மேனன் மூலமாக பல உதவிகளை பெற்ற காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற வேலு நாயர் என்பவர் எம்.ஜி.ஆர் குடும்பத்திற்கு உதவி செய்ய வருகிறார். நாடகத்தில் நடித்து வந்த அவர், கும்பகோணத்தில் இருப்பதால், எம்.ஜி.ஆர் அம்மாவிடம் பேசி, அக்கா நீங்கள் கும்பகோணம் வந்துவிடுங்கள் என்று அழைத்து சென்றுவிடுகிறார்.
கும்பகோணம் வந்தவுடன் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது அண்ணன் சக்கரபாணி ஆகிய இருவரும் குடும்ப வறுமை காரணமாக வேலு நாயருடன், நாடகங்களில் நடிக்க சென்றுள்ளனர். வேலு நாயர் வேலை பார்த்த மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் அபிமன்யூ என்ற நாடகத்தை தொடங்குகிறார்கள். அதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆட்கள் தேவைப்படும்போது வேலு நாயர் எம்.ஜி.ஆர் மற்றும் சக்ரபாணியை அழைத்து செல்கிறார்.
குழந்தையாக நாடகத்தில் அறிமுகமாக அங்கிருந்து நடிகனாக தேறி வருவது மிகவும் கஷ்டமான ஒன்று. காலை 5 மணிக்கே எழுந்து அனைத்து பயிற்சிகளையும் பெற்றுள்ளார் எம்.ஜி.ஆர். அப்போது அவருக்கு நாடகத்தில் ஆசிரியராக இருந்தவர் காளி என்.ரத்னம். அவரிடம் அடி வாங்கியே நடிப்பு மற்றும் வசனம் உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றுள்ளார்.
அதன்பிறகு மகாபரதத்தில் ஒரு சிறுவன் கேரக்டரில் பாம்பை பார்த்து பயப்படும் கேரக்டராக நடித்திருந்தார். இந்த கேரக்டரில் அவர் பாம்பை பார்த்து பயந்து ஓடியபோது மற்றொரு நடிகரின் மீது மோதி விழுந்து அழுதுவிடுவார். இதுவும் நடிப்பு என்று மக்கள் சிரித்துள்ளனர். அதன்பிறகு நல்லத்தங்காள் என்ற நாடகத்தில் 7-வது பிள்ளையாக நடித்துள்ளார் எம்.ஜி.ஆர். அப்போது தனது அம்மா நல்லத்தங்கள் தன்னை கிணற்றில் தூக்கி வீச வரும்போது எம்.ஜி.ஆரின் நடிப்பை பார்த்து மக்கள் கைத்தட்டியுள்ளனர்.
இதை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் அடுத்து என்ன நடிப்பது என்று தெரியாமல் அப்படியே நிற்க, அப்போது அருகில் திரைக்கு பின்னால் இருந்த ஒரு வாத்தியார் எம்.ஜி.ஆரை அழைத்து கையில் வைத்திருந்த பிரம்பால் அடித்துள்ளார். அடி தாங்க முடியாமல் அழுத எம்.ஜி.ஆர் அடுத்தப்பக்கம் செல்ல, அங்கு ஜால்ரா தட்டும் ஒருவர் அடித்துள்ளார். இப்படி நாடக வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொண்டு உண்மையிலேயே அழுது எம்.ஜி.ஆர் அந்த காட்சியில் நடித்துள்ளார்.
இதில் காளி என் ரத்னம் எம்.ஜி.ஆர் தொடையை பிடித்து கிள்ளியபோது வலி தாங்க முடியாத எம்.ஜி.ஆர், அம்மா என்று கத்த, முதுகில் அடித்து போய் நடி என்று தள்ளிவிடுகிறார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் நடித்து நாடகம் முடிவுக்கு வருகிறது. அடி தாங்க முடியாமல் அழுத எம்.ஜி.ஆர் அழுவது போல் சிறப்பாக நடிக்கிறார் என்று பலரும் கைத்தட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.