தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனராக பல பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இயக்குனர் விக்ரமன் உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த இவர், 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து, சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, நட்புக்காக, முத்து, படையப்பா, தெனாலி, பஞ்ச தந்திரம், தசவதாரம், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்களையும் இயக்கிய முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும், கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், பல படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்து வருகிறார். பொதுவாக தான் இயக்கும் படங்களில் இறுதியிலோ அல்லது நடுவிலோ ஒரு காட்சியில் வரும் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது முழுநேர நடிகராக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். காமெடி வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் சிறப்பாக நடித்து வரும் கே.எஸ்.ரவிக்குமார் சிவாஜி கணேசனிடம் திட்டு வாங்கியுள்ளார்.
இயக்குனராக ரஜினி நடிப்பில் ஒரு சில படங்களை இயக்கியுள்ள கே.எஸ்.ரவிக்குமாருக்கு முத்து மற்றும் படையப்பா ஆகிய 2 படங்களும் முக்கியமான படங்களாக அமைந்தது. இதில் முத்து படம் தென்மாவின் கொம்பெத் என்ற மலையாள படத்தின் தழுவாலக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், படையப்பா படம், நேரடி தமிழ் படமாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்தின் அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
1999-ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படாக அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியில், ஐயர்கள் வருவது போன்று அமைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த காட்சி படமாக்கப்படும்போது, ஐயர் வேஷத்தில் இருந்த சிலரை கே.எஸ்.ரவிக்குமார் எட்டி மிதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார். இதை பார்த்த சிவாஜி கணேசன் பிரேக் நேரத்தில், ரஜினிகாந்திடம் சென்று இவன் டைரக்டரா இல்ல பொறுக்கியா என்று கேட்டுள்ளார். இந்த தகவலை நடிகர் சரத்குமாருடன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்ற இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“