சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள "கருடன்" திரைப்படத்தின் விமர்சனம்
கதைக்களம் :
தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை கிராமத்தில் இருக்கும் ஒரு இடத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறார் அரசியல்வாதியான ஆர்.வி.உதயகுமார். ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அதே கிராமத்தில் இணைபிரியா நண்பர்களாக வலம் வருகிறார்கள் சசிக்குமாரும், உன்னி முகுந்தனும். உன்னியின் நிழலாக வருகிறார் அவரின் தீவிர விஸ்வாசியான சூரி.
அந்த இடத்தின் மூலபத்திரத்தை கைப்பற்ற பல தந்திர வேலைகளை செய்கிறார் உதயகுமார். அவருடைய திட்டங்கள் இவர்களின் நட்பை எவ்வாறு பாதிக்கிறது, அதை தொடர்ந்து நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களே இப்படத்தின் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு
தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணாவிற்காக (உன்னி முகுந்தன்) தன் உயிரையே தரும் அளவிற்கு விசுவாசமானவராக "சொக்கன்" என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி. விடுதலை படத்தில் கதையின் நாயகனாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த சூரி, இப்படத்தில் ஒரு படி மேலே சென்று "ஹீரோ"வாக ஜொலித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் சூரி, எமோஷனல் காட்சிகளில் கலங்க வைத்து தன்னால் ஹீரோயிசமும் செய்ய முடியும் என நிரூபித்துள்ளார்.
சசிகுமார் வழக்கமான கிராமத்து நண்பன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். மலையாள நடிகரான உன்னி முகுந்தனுக்கு தமிழில் பேர் சொல்லும் படமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும் சமுத்திரக்கனி, மைம் கோபி, வடிவுக்கரசி, ஷிவதா, ரோஷினி என அனைவரும் தங்களுக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார்
இயக்கம் மற்றும் இசை
விஸ்வாசத்திற்கும், நியாயத்திற்கும் இடையே நடக்கும் போரில் எது வென்றது என்பதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கதைசொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். ஆர்தர் வில்சனின் கேமரா படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசை மிரட்டிய யுவன், பஞ்சவர்ணக் கிளியே பாடல் வழியாக ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.
படத்தின் பிளஸ் :
அழுத்தமான கதாபாத்திரங்களின் வடிவமைப்பு
சூரியின் தரமான சம்பவம்
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை
ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகள்
வசனங்கள்
இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ்
படத்தின் மைனஸ்
யூகிக்க கூடிய காட்சிகள்
சற்று தொய்வான முதல் பாதி
அதீத வன்முறை காட்சிகள்
மொத்தத்தில் நட்பு, அன்பு, துரோகம், நியாயம், விசுவாசம் இவற்றை உள்ளடக்கிய விறுவிறுப்பான கிராமத்து படமாக வென்றிருக்கிறது கருடன்
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“