இசையில் பல சாதனைகளை செய்துள்ள எம்.எஸ்.விஸ்வநாதன் தான் ஒரு அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக இருக்கும்போதே தனது குருவான சுப்பையா நாயுடுவுக்கு மெட்டு போட்டு அசத்தியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தனது இசையால் பலரையும் கட்டிப்போட்டவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் இவர், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தனது இசையால் வெற்றியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இசையில் பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும், நடிப்பில் ஆர்வம் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன், நடிப்பதற்காக தான் திரையுலகை நோக்கி வந்துள்ளார். நாடக உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நடிகர் டி.எஸ்.பாலையாவின் நாடக குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாடக பாடல்களுக்கு மெட்டு போடுவது பின்னணி இசை வாசிப்பது என அங்கே வேலைகளை செய்துகொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் நாடகத்தில் செய்த தவறின் காரணமாக டி.எஸ்.பாலையாவிடம் அடி வாங்கிய எம்.எஸ்.வி, கோவையில் செயல்பட்டு வந்த ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தார். இங்கே வேலை பார்த்த அவருக்கு அடுத்து ப்ரமோஷன் கிடைத்து இசையமைப்பாளர்களுக்கு உதவி செய்பவராக இருந்தார். அப்போது அவருக்கு இசைக்கருவிகளை தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் கிடைக்கும்போது அதை வாசித்தும் பழகியுள்ளார்.
அப்போது, ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் நிறுனத்தில் அஸ்தான இசையமைப்பாளராக இருந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஒரு பாடலுக்கு மெட்டு அமைக்க யோசித்துள்ளார். ஆனால் எவ்வளவோ யோசித்தும் அவருக்கு அந்த பாடலுக்கான மெட்டு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் அவர் எழுந்து சென்றபோது, அந்த ஹார்மோனியத்தில் அமர்ந்த எம்.எஸ்.வி ஒரு மெட்டு போட்டுள்ளார். அப்போது அந்த பக்கமாக வந்த சுப்பையா நாயுடு அருமையாக இருக்கிறதே என்று அவரை பாராட்டி, அந்த டியூனை படத்தில் சேர்த்துள்ளார்.
அதன்பிறகு படத்திற்கு இசையமைக்கும்போது 2 பாடல்களுக்கு தானும் 2 பாடல்களுக்கும் எம்.எஸ்.வியும் இசையமைக்குமாறு சுப்பையா நாயுடு கூறியுள்ளார். ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு மாற்றமாகி சென்றபோது, எம்.எஸ்.வியை அவர்கள் அழைத்து செல்ல விரும்பவில்லை.
அப்போது எம்.எஸ்.வியை அந்நிறுவன உரிமையாளரிடம் அழைத்து சென்ற, சுப்பையா நாயுடு, நான் போட்ட பாடல்கள் எல்லாம் நல்லாருக்குனு சொல்லி ரசிச்சீங்களே இதில் பாதி பாடல்கள் இவன் இசையமைத்தது தான். இதை நான் அப்போதே சொல்லிவிருந்தால், நீங்கள் அந்த பாடலை கேட்டிருக்க மாட்டீர்கள். இவன் ஒரு ஞானஸ்தான் இவனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அப்படித்தான் எம்.எஸ்.வி சென்னைக்கு வந்து பெரிய இசையமைப்பாளராக உருவெடுத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.