தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தவம் கிடந்த நிலையில், அவரே போன் செய்து தனது படத்தில் நடிக்க அழைத்து அவரை ஒரு வாரம் காக்க வைத்துள்ளார் கவிஞர் வாலி.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
அதேபோல், கவிஞராக மட்டுமல்லாமல் திரைக்கதை மற்றும் வசனக்கர்த்தாவாகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். அதேபோல் ஒரு நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ள கவிஞர் வாலி தான் நடிகனமாக மாறிய சம்பவம் குறித்து பேசியுள்ளார். 1983-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படம் பொய்க்கால் குதிரை. விஜி, ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
படத்திற்கான பாடல்கள அனைத்தையும் கவிஞர் வாலி தான் எழுதியிருந்தார். இந்த படத்தின் கதையை எழுதிய இயக்குனர் கே.பாலச்சந்தர், இதில் ஒரு முக்கிய கேரக்டரில் வாலி நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரை போனில் தொடர்புகொண்டுள்ளார். போனை எடுத்த வாலியிடம், நான் ஒரு புதிய படம் எடுக்க போகிறேன். அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி அடுத்த வாரம் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
80-களில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு படம் கிடைத்துவிடாதா என்று பல நடிகர்கள் ஏக்கத்தில் இருந்த நிலையில், தானாக தேடி வந்த வாய்ப்பை வாலி ஒரு வாரம் கழித்து சொல்கிறேன் என்று சொல்கிறாறே என்று யோசித்த பாலச்சந்தர். சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்துள்ளார். அதன்பிறகு மீண்டும் ஒரு வாரம் கழித்து கே.பாலச்சந்தர் வாலிக்கு போன் செய்ய இந்த முறை, வாலி கண்டிப்பாக நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட கே.பாலச்சந்தர் ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும், மறுபக்கம், கடந்த வாரம் கேட்டபோது ஏன் அடுத்த வாரம் சொல்கிறேன் என்று சொன்னீங்களே, அது என்ன பந்தாவா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட வாலி, பந்தா எல்லாம் ஒன்றும் கிடைகாது. அந்த கேரக்டரில் நான் தான் நடிக்க வேண்டும் என்று குறைந்தது ஒருவாரமாவது உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறதா என்பதை செக் செய்வதற்காகவே நான் அப்படி சொன்னேன் என்று கூறியுள்ளார் வாலி.
அதன்பிறகு பொய்க்கால் குதிரை படம் தொடக்கப்பட்டது. இந்த படத்தில் சம்பந்தம் என்ற முக்கிய கேரக்டரில் வாலி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“