/indian-express-tamil/media/media_files/2025/08/22/rajinikant-news-2025-08-22-13-26-07.jpg)
எழுதியவர் கென்ஷின்
90களில் கேரளாவில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்த எனக்கு, திரைப்படம் பார்ப்பது என்பது அரிதான நிகழ்வு. வீட்டில் கேபிள் டிவி இல்லை, பெற்றோரும் தியேட்டருக்குப் போவது கிடையாது. தூர்தர்ஷனும், எப்போதாவது அண்டை வீட்டார்களின் வீட்டில் பார்க்கும் திரைப்படங்களும் மட்டுமே எனது சினிமா உலகமாக இருந்தது. அப்போது என் மனதில் பதிந்த கதாநாயகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஷாருக்கான், திலீப் குமார், ராஜ்கபூர், மற்றும் கமல்ஹாசன். இந்த பட்டியலில் ரஜினிகாந்த் இல்லை. ஆனாலும், நான் அவரது நடையையும், வசனங்களையும் அறியாமலேயே பின்பற்றினேன். ஒரு ரசிகனாக அல்ல, அவரது தனித்துவமான ஸ்டைல் என்னை ஈர்த்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:
நான் வளர்ந்து ஒரு நடிகனாகவும், எழுத்தாளனாகவும் ஆனபோதுதான், ரஜினியின் பாதிப்பு என் வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஒரு நடிகரின் பார்வையில் சினிமாவைப் பார்க்கத் தொடங்கியபோது, ரஜினிகாந்த் ஒரு பிரம்மாண்டமான ஆளுமை கொண்ட சூப்பர்ஸ்டார் மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது வெற்றி, சாதாரண அசைவுகளைக் கூட ஒரு கொண்டாட்டமாக மாற்றியதில் தான் இருந்தது.
அவரது நடிப்பை "மிகையான நடிப்பு" என்று சிலர் ரஜினியை விமர்சித்தாலும், நான் கூர்ந்து கவனித்தபோது, அவரது ஒவ்வொரு அசைவும் சிகரெட்டை ஸ்டைலாகப் போடுவது முதல், மெதுவாக நடப்பது வரை திட்டமிட்ட, துல்லியமான நடிப்பு என்பது புரிந்தது. அது ஒரு கட்டுப்பாட்டின் மொழி, ஒரு தாளம், ஒரு சரியான நேரம், மற்றும் பார்வையாளர்களின் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றல். அவரது முன்னோடியில்லாத ஸ்டார் அந்தஸ்துக்கு முக்கிய காரணம், அவர் தனது உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதுதான். ரஜினிகாந்த் பெரும்பாலும் அமைதியையும், அசைவில்லாமையையும் அர்த்தத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தினார். உதாரணமாக, ஒரு சண்டை காட்சியில், அவர் உடனடியாக சண்டையிடத் தொடங்காமல், அந்த பிரேமில் அசையால் நின்று, பதற்றத்தை அதிகரிக்க விடுவார்.
‘முரட்டுக்காளை’ (1980) போன்ற படங்களில், அவரது நடை, வேட்டியைச் சரிசெய்தல், அல்லது ஒரு தடியின் மீது சாய்வது போன்ற சாதாரண அசைவுகளும் ஒரு மேடை இருப்பைக் கொடுப்பதாக மாறின. அந்த படத்தில் கரும்பு சாப்பிடுவது போன்ற ஒரு எளிய செயலும் பார்வையாளர்கள் மனதில் பதிந்தது, ஏனெனில் அவர் அதற்கு ஒரு தாளத்தையும், அதிகாரத்தையும் சேர்த்தார். ஒரு நடிகரின் உடல் தேவையில்லாத இறுக்கத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க நடிப்புப் பயிற்சியாளர் உத ஹேகன் கூறுகிறார். ரஜினியின் விஷயத்தில், ஒரு காட்சி பதற்றமாக இருந்தாலும், அவர் அமைதியாகவும், சாதாரணமாகவும் இருப்பார். அவர் நடிப்பது போல் தோன்றாது, ஏனென்றால் அவர் வேறொருவராக மாற முயற்சிப்பதில்லை.
மகேந்திரனின் ‘ஜானி’ (1980) படத்தில், ரஜினி இரண்டு கேரக்டர்களில் நடித்தார். ஜானி என்ற திருடன் மற்றும் வித்யாசாகர் என்ற முடி திருத்தும் நிபுணர். அதே ஆண்டு தான் அவரது பிரம்மாண்ட வெற்றி படங்களான ‘பில்லா’ மற்றும் ‘முரட்டுக்காளை’ வெளியானது. ஆனால் ‘ஜானி’ படத்தில், ரஜினியின் கேரக்டர் உணர்ச்சிபூர்வமாகவும், மென்மையாகவும் இருந்தன. ரஜினியின் மிகப்பெரிய திறனான "கேட்பது" என்பதை இந்தப் படத்தில் காணலாம். முகத்தால் மட்டும் கேட்காமல், அவரது முழு உடலும் கேட்டு, அசைவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் அவரது எதிர்வினைகளை வெளிப்படுத்தினார். ஸ்ரீதேவியுடன் அவர் உரையாடிய காட்சிகளில், அவர் “ஆண்டி-ரஜினி”யாகக் கட்டுப்படுத்தப்பட்ட, உள்முகமாக, முழுமையாக இருந்தார்.
1980களின் பிற்பகுதியில், எஸ்பி முத்துராமன் (வேலைக்காரன், 1987) மற்றும் ராஜசேகர் (மாவீரன், 1986) போன்ற இயக்குநர்களுடன் இணைந்தபோது, ரஜினி நடிகரிலிருந்து சூப்பர்ஸ்டாராக முழுமையாக மாறினார். இந்தக் காலகட்டத்தில் தான், அவரது ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வசனங்களுக்கு முன் நீண்ட இடைவெளிகள், க்ளோசப் ஷாட்கள், மற்றும் ஸ்லோ-மோஷன் அறிமுகக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. 1991ல் வெளியான மணிரத்னத்தின் ‘தளபதி’ திரைப்படம், ரஜினியின் நுட்பமான நடிப்பையும், ஸ்டைலிசத்தையும் ஒருங்கிணைத்தது. இதுவே பின்னாளில் கே.எஸ்.ரவிகுமார் (முத்து, 1995, படையப்பா, 1999) மற்றும் பி.வாசு (சந்திரமுகி, 2005) போன்ற இயக்குநர்களுக்கு வழி வகுத்தது.
நடிகர் ரஜினிக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் இடையிலான இந்த வேறுபாடு, மற்றொரு தமிழ் சூப்பர்ஸ்டாரான கமல்ஹாசனுடன் ஒப்பிடுவதற்கு வழி வகுத்தது. கமல்ஹாசன் பெரும்பாலும் கதாபாத்திரத்துக்குள் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்வார். அவரது படங்கள் தோல்வியடையும்போது, அது அவரது நடிப்பின் மீதான விமர்சனத்துடன் ஒப்பிடப்பட்டது. ஆனால் சூப்பர்ஸ்டார் என்ற ஒரு எல்லைக்குள் இருந்த ரஜினி, ஒருபோதும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. அவர் ஒருபோதும் ஒரு கதாபாத்திரமாக மாற முயற்சிப்பதில்லை. ஆகையால், ரஜினி படம் தோல்வியடையும்போது, அந்தப் படத்தின் தோல்வி இயக்குநரின் மீது சுமத்தப்பட்டது.
கமல்ஹாசனுக்குக் கதாபாத்திரம் முக்கியம் என்றால், ரஜினிக்கு அவருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளி முக்கியம். ஒருவர் கதாபாத்திரத்தை “நம்பும்படி” காட்ட முயற்சித்தால், ரஜினி சாதாரண விஷயங்களை ஒரு ஸ்டைலான தளத்திற்கு உயர்த்தினார். இது அவரை நம்பும்படி செய்தது, ஏனென்றால் பார்வையாளர்கள் அவரிடம் இருந்து ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. கமல்ஹாசன் தன் கதாபாத்திரங்களுக்குள் மறைந்து போவதைப் போல இல்லாமல், ரஜினி தன் கதாபாத்திரங்களை, தனது ஆளுமை வழியாக வெளிப்படுத்தினார்.
‘முள்ளும் மலரும்’ (1978), ‘பாட்ஷா’ (1995), ‘படையப்பா’ (1999) அல்லது ‘சிவாஜி: தி பாஸ்’ (2007) என எந்தப் படமாக இருந்தாலும், ரஜினிகாந்தின் சாராம்சம் அடிப்படையிலான ஒன்று தான். நடிகனாக நான் செயல்படும்போது, மற்ற யாரோ ஒருவராக மாறுவதைக் காட்டிலும், “நான் நானாகவே” இருப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்தேன். இது இந்தியத் திரையுலகில் இன்னும் கடினம். ஆனால் ரஜினிகாந்த், ஒரு நடிகரின் நோக்கம் சரியானதாக இருந்தால், உணர்ச்சிகள் இயற்கையாகவே வெளிப்படும் என்பதற்கு சான்றாக இருக்கிறார்.
ரஜினிகாந்தின் சினிமா பயணத்தின் 50 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், நானும் இப்போது ரஜினியின் நடையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன். அவரைப் போல நடப்பதற்காக அல்ல, அந்த உடல்நிலை எனக்கு வலி நிவாரணம் அளித்து, அதே நேரத்தில் நிதானமாகவும், உந்துதலுடனும் இருக்க உதவுகிறது. அது ரஜினிகாந்தின் ஸ்டைல் மட்டுமல்ல என்பதை நான் உணர்ந்தேன். அவரது உலகில், மிகச் சாதாரண அசைவுகள் கூட சமநிலை, தாளம் மற்றும் உயிர் பிழைப்பதற்கான ஓட்டமாக மாறக்கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.