திரைப்படங்களுக்காக 69-வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தமிழ் திரைப்படங்கள் தேசிய விருதை வென்றுள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகளில், பல தமிழ் திரைப்படங்கள் விருது பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இதில், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்த ஜெய் பீம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன், தம்பி ராமைய்யா மற்றும் சமுத்திரக்கனி இயக்கி நடித்த விநோதய சித்தம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. இதனால் இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட பீரியட் படமான ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்திற்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக சிறந்த படத்திற்கான தேசிய விருது தமிழ்படத்திற்கு அறிவிக்கப்படவில்லை. அதே சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் மாதவன் முதன் முதலில் இயக்கிய நடித்த ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விரு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்துக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது திரைத்துறையில் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் இந்த படத்தில் நாயகனாக நடித்த நல்லாண்டி தாத்தாவுக்கும் சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது உயிருடன் இல்லை.
பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் மாயவா என்ற பாடலை பாடியதற்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான் ஃபியூச்சர்டு பிலிம் கேட்டகிரியில் கருவறை படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிற்பிகளின் சிற்பங்கள் படத்திற்கு சிறந்த கல்வி படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தில் பாடிய கால பைரவா சிறந்த பின்னணி பாடகராகவும், புஷ்பா படத்திற்காக இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்துக்கு இசையமைத்த கீரவாணி சிறந்த பின்னணி இசையமைப்பாளராக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோஸ்ட் பாப்புலர் பிலிம் என்ற கேட்டகிரியில் ஆர்ஆர்ஆர் படம் விருது வென்றுள்ளது. புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”