தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் 300-க்கு மேற்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெற்ற படங்களை எடுத்துக்கொண்டால் அதை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு ஒரு சில படங்களே வெற்றி பட்டியலில் இணைகின்றன. குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியை தழுவுவதும், வளர்ந்து வரும் நடிகரின் படம் பெரிய வெற்றிப்படமாக அமைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், 2025-ம் ஆண்டில் 3 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை 72 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் 5 படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடா முயற்சி திரைப்படம் ரூ100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டாலும், அந்த படம் விமர்சனரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன், குடும்பஸ்தன் படங்கள் பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர்.
இந்த வரிசையில், 2025-ம் இதுவரை வெற்றி பெற்ற 5 திரைப்படங்கள்:
மதகஜராஜா
விஷால் சந்தானம் கூட்டணியில், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் மதகஜராஜா. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா, மணிவண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சோனு சூட் வில்லனாக நடித்திருந்தார். 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து ரூ50 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
டிராகன்
ஓ மை கடவுளே படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டிராகன்.லவ்டுடே படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில், அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்திருந்தார். மிஷ்கின் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
குடும்பஸ்தன்
குட்நைட், லவ்வர் என தொடர்ந்து 2 வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் குடும்பஸ்தன். இந்த படத்தின் டிரெய்லரே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து மணிகண்டனுக்க ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது.
வீர தீர சூரன்
விக்ரம் நடிப்பில் கடந்த 27-ந் தேதி வெளியான வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டீவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரியவரும். விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷார விஜயன், ஆகியோருடன், பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சிரமூடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சித்தா படத்தை இயக்கிய எஸ்.யூ அருண்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களில், பாலாவின் வணங்கான், ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் அளித்த படங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.