வாரிசு படத்தை தவறவிட்ட வெள்ளி விழா நாயகன்
விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், படம் தொடர்பான அப்டேட்கள் நாள்தோறும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாரிசு படத்தை வெள்ளி விழா நாயகன் ஒருவர் தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மைக் மோகன் என்று அழைக்கப்படும் நடிகர் மோகன், வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க முதலில் கேட்கப்பட்டதாகவும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோடிகளில் சம்பளம் பெரும் லவ்டுடே இயக்குனர்
கோமாளி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தொடர்ந்து லவ்டுடே படத்தின் மூலம் இயக்குனர் நாயகான அறிமுகமானார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து பிரதீப் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அடுத்தப்படத்தையும் அவரே இயக்கி நாயகான நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்காக அவருக்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் லவ்டுடே படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.
மீண்டும் அஜித்துடன் விவேகம் நாயகி
அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் நடிக்கவில்லை என்பதை விக்னேஷ் சிவன் உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து நாயகியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் படத்தின் பாடலை நீக்க குழந்தைகள் நல அமைப்பு கோரிக்கை
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள படம் பதான். வரும் ஜனவரி 25-ந் தேதி இந்த படம் 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெஷராம் ரங் என்று தொடங்கும் இந்த பாடலில் தீபிகா படுகோனே 2பீஸ் உடையில் நடித்திருப்பது பலரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த பாடலை நீக்குமாறு குழந்தைகள் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு சீமான் கண்டனம்
பிரபல சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருந்தார் தற்போது அவர் முன்னாள் சூப்பர்ஸ்டார். இப்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார். வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ சொன்னதில் தவறில்லை. விநியோகஸ்தர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியிருந்தார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் பிஸ்மி அலுவலகத்திற்கு சென்று பேசியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் சூப்பர் ஸ்டார் பட்டம் நிறந்தராமானதல்ல மாறிக்கொண்டே இருக்கும் முன்பு தியாகராஜபாகவதர், அதன்பிறகு எம்.ஜி.ஆர், அதன்பிறகு ரஜினி இப்போது விஜய். இந்த கருத்தை கூறிய பிஸ்மியை மிரட்டும் வகையில் அவரின் அலுவலகத்திற்கு ரஜினி ரசிகர்கள் சென்றது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “