90-களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், தற்போது அப்பாஸ் சின்னத்திரையில் நுழைந்துள்ளார்.
1996-ம் ஆண்டு தமிழில் வெளியான காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, மின்னலே, ஆனந்தம், காதலுடன், மானஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இளம் பெண்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். மேலும் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் அவரின் மருமகனாக நடித்திருப்பார் அப்பாஸ்.
கடைசியாக தமிழில் ராமாணுஜம் என்ற படத்தில் நடித்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் நடிப்பில் வாய்ப்புகள் குறையவே குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார். சமீபத்தில் இந்தியா திரும்பிய அப்பாஸ், பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இந்த பேட்டிகளில் தான் மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல் படியாக சின்னத்திரையில் நுழைந்துள்ள அப்பாஸ், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின், கெஸ்ட்டாக வந்துள்ளார். இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அப்பாஸ் திரையில் வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விரைவில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க உள்ள நிலையில், அப்பாஸ் அதில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil