நடிகர் அஜித்குமார் புத்தாண்டு தினத்தை தனது குடும்பத்துடன் கொண்டாடியது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி இணையத்தில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் சாதித்த சில நடிகர்களில் முக்கியமானவரான அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியான நிலையில், கடந்த டிசம்பர் 31-ந் தேதி துணிவு படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
வெளியான சில மணி நேரங்களில் துணிவு படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த டிரெய்வர் அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது. இந்த உற்சாகத்துடன் துணிவு படத்தின் ப்ரமோஷன் பணிகளில் அஜித் ரசிகர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
ஆனால் வழக்கம்போல் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காக நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் புத்தாண்டு தினத்தை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருக்கும் அஜித்குமார், ரசிகர்களுக்கு எதாவது சொல்ல வேண்டும் என்றால் தனது மேனேஜர் ட்விட்டர் கணக்கில் பதிவிடுவது வழக்கம்.
இதனிடையே சமீபத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராம் கணக்கை திறந்துள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைசாக இருந்த நிலையில், இனி அஜித் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இந்த பக்கத்தில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஜித் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் தனது மனைவி மகன் மகளுடன் இருக்கும் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மேட்சிங் ட்ரெஸ் அணிந்துள்ளார். இருவரும் கருப்பு நிற உடை அணிந்து ஜோடியாக நிற்கும் புகைப்படங்கள் உள்ளது. அதேபோல், மகள் அனோஷ்காவுடன் அஜித் ஷாலினி இருவரும் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படம், மற்றும் அஜித் தனது மகனுடன் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஷாலினி, அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இந்த புகைப்படங்களில் உள்ள அஜித்தின் மகள் அனோஷ்கா ஹீரோயின் போல் உள்ளதாகவும், அஜித்தின் குடும்பத்தில் அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil