அஜித் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இணைந்த முதல் படமான வாலி படத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து பகிர்ந்துகொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் அஜித் குமார். 1990-ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் அறிமுகமான அஜித், 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பவித்ரா, ஆசை, வான்மதி, ராசி,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா பில்லா,வரலாறு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வசூலை வாரி குவித்து வருகிறது. இதனிடையே அஜித் அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.
இதனிடையே 1995-ம் ஆண்டு வெளியான ஆசை படத்திற்கு பிறகு அஜித்தின் திரை வாழ்க்கையில் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக இருப்பது வாலி. 1999-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். சிவா, தேவா என இரட்டை வேடங்களில் நடித்திருந்த அஜித் வில்லத்தனத்தில் மிரட்டிய படம் வாலி.
பெண்கள் மீது அதிக மோகம் கொண்ட வாய் பேச முடியாத காது கேளாத அண்ணன் தேவா, தம்பி சிவா காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியா மீது ஆசைப்படுகிறான். இதை அறியாத தம்பி அண்ணனை முழுவதுமான நம்பி வரும் நிலையில், அவரை பற்றி குறை சொல்லும் மனைவியிடமும் அண்ணனை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார். இதனால் இறுதியில் என்ன ஆகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லிய படம் தான் வாலி.
அஜித் அண்ணன் தம்பியாக கலக்கிய இந்த படத்தில் சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார். ஜோதிகா இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் சிம்ரன் தேவா என நினைத்து சிவாவிடம் பேசுவதும், சிவா என்று நினைத்து தேவாவை கட்டிப்பிடிப்பதும் என ஒருவிதமாக குழப்பத்திலேயே சுற்றி வருவார். இதற்காக பல யோசனைகளை அவர் முயற்சித்தாலும் அதற்கு பலன் இல்லாமல் இருக்கும். இந்த மாதிரியான ஒரு காட்சிக்கு அஜித் தனது மீசையை எடுக்க சம்மதிக்காததால் ஒரு நல்ல சீன் எடுக்க முடியாமல் போய்விட்டது என இயக்குனர் மாரிமுத்து கூறியுள்ளார்.
இந்த படத்தின் சிம்ரனுக்கு இருக்கும் குழப்பத்தை தீர்க்க சிவா தனது மீசையை எடுத்துவிட்டு வந்து ப்ரியா (சிம்ரன்) பக்கத்தில் அமர்வார். அப்போதும் இவர் சிவாவா அல்லது தேவாவா என பிரியாவுக்கு குழப்பம். அப்போது சிவா பேச தொடங்கியது பிரியா அவனை கட்டிப்பிடித்துக்கொள்வாள். அப்போது சிவா இனி மீசை இல்லாமல் இருந்தால் நான். மீசையுடன் இருந்தால் தேவா என்று சொல்வார்.
அதன்பிறகு வெளியில் சென்று தேவாவிடம் பேசும்போது அவரும் மீசையை எடுத்திருப்பார். இதை பார்த்த சிவா என்னை மாதிரியே தான் நீயும் யோசித்திருக்கிறாய் என்று சொல்வார். ரொம்ப நல்ல சீன் இது. ஆனால் இதற்காக அஜித் சார் மீசை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் இந்த சீன் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாரிமுத்து பேசும் இந்த வீடியோவை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil