Tamil Cinema Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் வலிமை. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் அனைவரையும் வியக்க வைத்தது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போதுவரை இந்த படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நலையில், வலிமை திரைப்படம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று (பப்ரவரி 24) வெளியான நிலையில், இது குறித்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம், வலிமை திரைப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்புதான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் தாய் பாசம் தொடர்பான பாடல் அம்மா நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது.
அதேபோல் வலிமை திரைப்படம் அம்மா பிறந்தநாளன்று வெளியிடப்பட்டுள்ளது. புரட்சி தலைவி மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்ட அஜித் அரசியலுக்கு வருவதற்காக தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். என்று நினைப்பதாக கூறிய அவர், அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறராரா,? அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் உள்ளது. என்று கூறியிருந்தார்.
பூங்குன்றனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து இந்த கருத்துக்கு அஜித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஜித் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதையும் அதனை ஊக்குவிப்பதையும் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகங்கவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் நடிகர் அஜித்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“