திரைப்படங்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், அஜித் வாழ்க, விஜய் வாழ்க, என்று கோஷம்போடும் ரசிகர்களே நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள் என்று நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், படங்களில் நடிப்பதை தவிர, துப்பாக்கிச்சுடுதல், பைக்ரைடு செல்லுதல், மற்றும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பது என விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித், துபாயில் நடைபெறும், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு, அஜித் குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அஜித், தனது கார் ரேஸிங் அணியையும் கட்டமைத்தார். தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், கார் ரேஸிங் பந்தையத்திற்கு தாயராகும் வகையில், துபாயில் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியது. மேலும் துபாய் கார் ரேஸ்க்காக தயாராகி வரும் அஜித், அடுத்த 9 மாதங்களுக்கு நடிப்பில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.
அஜித் குமார் ரேஸிங் சார்பில் 414, 901 என இரு அணிகள் பங்கேற்கின்றன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அஜித் அணி 3-வது இடத்தை பிடித்தது. இதற்கான அறிவிப்பு வெளியானவுடன், நடிகர் அஜித் துள்ளி குதித்து மகிழ்ச்சியடைந்த வீடியோவும், அவரது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ பதிவுகளும் இணைதயத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தூபாயில் பேட்டி அளித்த அஜித், ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார். முன்னணி நடிகராக இருந்தாலும், ரசிகர்கள் தேவையில்லை என்று முடிவு செய்து, அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தார். ஆனாலும் அவரது தீவிர ரசிகர்கள் அவ்வப்போது அவரை கொண்டாடி வருகிறது. அவரது படங்கள் வெளியாகும்போது திருவிழா போல் கொண்டாடகின்றனர். அதில் சமீபத்தில் கடவுளே அஜித்தே என்ற கோஷம் அஜித் ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டது. இதற்கு ஒரு கட்டத்தில் அஜித் தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனிடையே தற்போது ரசிகர்கள் குறித்து பேசியுள்ள அஜித், திரைப்படங்களை பாருங்கள் ஆனால் அஜித் வாழ்க விஜய் வாழ்கனு சொன்ன நீங்க எப்போ வாழப்போறீங்க, உங்க அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நீங்க நல்லா இருக்கீங்கனு தெரிஞ்சா நான் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார். அஜித்தின் இந்த பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“