/indian-express-tamil/media/media_files/2025/04/29/vyIp18cO1tC2KUDMs3Ct.jpg)
பத்ம பூஷன் விருது வென்ற நடிகரும் கார்பந்தய வீரருமான அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அஜித், விரைவில் நேரில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடிகர் அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், பத்ம பூஷன் விருது வென்றது குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்த அஜித்குமார் விரைவில் நேரில் சந்திப்போம் என்று கூறியிருந்தார். நான் எதோ கனவுல இருக்க மாதிரி இருக்கு இந்த கனவுல இருந்து என்ன யாராவது வந்து எழுப்பி விட்டுரு வாங்களோன்னு பயந்தேன் பத்மபூஷண் விருதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிக் கடன்பட்டு இருக்கேன். "நான் இந்த `தல' டேக்லாம் விரும்புறது இல்ல. என்ன ஏ.கே. என்று இல்ல அஜித்-ன்னு கூப்பிட்டாலே போதும், நான் ஒரு நடிகன் அதுக்கு சம்பளம் வாங்குறேன் அவ்ளோ தான் என்னோட வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் வாழ்க்கைய எவ்வளவு சிம்பிளா வெச்சுக்க முடியுமோ அவ்வளவு சிம்பிளா வெச்சுப்பேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, பத்ம பூஷன் விருதுக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார் பத்ம விருதுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. "என்னுடைய மிகப்பெரிய பலம் எனது பெற்றோர்கள் எனது சகோதரர்கள் ஷாலினி மற்றும் எனது குழந்தைகள். ஷாலினி என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளார். நல்லதோ கெட்டதோ என்னுடன் இருந்த எனது ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு நன்றி. என் இதயத்திற்குள் நான் ஒரு மிடில் கிளாஸ் தான் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.