சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் "மெஹந்தி சர்க்கஸ்" தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், 2-வது திருமணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் சமையல் செய்து அசத்தி வரும் ரங்கராஜ், விஜய் டிவியின் "குக் வித் கோமாளி" சீசன் 5 மற்றும் 6-வது சீசனில் நடுவராகப் பங்கேற்று வருகிறார்.
தற்போது சின்னத்திரையில் புகழ்பெற்ற பிரபலமாக இருந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், , பிரபல செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஜாய் கிறிசில்டாவை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இன்று (ஜூலை 27) காலை, மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஜாய் கிறிசில்டாவை 2-வதும் திருமணம் செய்து கொண்ட செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட, ஜாய் கிறிசில்டா தனது எக்ஸ் பக்கத்தில், "பேபி லோடிங் 2025 (Baby loading 2025), நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் (We are pregnant), 6வது மாத கர்ப்பம் (6th month of pregnancy), என்ற தலைப்புடன், தனது கர்ப்பிணி வயிற்றை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதில் வெளியிட்டுள்ள ஒரு படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிசில்டாவின் நெற்றியில் குங்குமம் வைப்பதும் இடம்பெற்றுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது அனைவரும் அறிந்த ஒரு தகவல். அவர் இதற்கு முன்பு ஸ்ருதி ரங்கராஜ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஸ்ருதி பிரிந்துவிட்டதாக பல வதந்திகள் பரவின. ஆனால், அந்த நேரத்தில் ஸ்ருதி ஒரு குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு, பிரிவினைக் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஸ்ருதி ரங்கராஜ் ஒரு வழக்கறிஞர் ஆவார். அவரது இன்ஸ்டாகிராம் பயோவில் "வழக்கறிஞர் | தாய் | கோயம்புத்தூர்வாசி | மினிமலிஸ்ட் | மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி | சமூக சேவகி | திராவிட சித்தாந்தி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் மற்றும் கர்ப்பம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பல ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், மாடம்பட்டி மற்றும் ஸ்ருதி இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்த திடீர் அறிவிப்புகள் தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.