தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோபாலா. பாராதிராஜாவின் படங்களில் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியுள்ள இவர், 1982-ம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து, விஜயகாந்த் நடிப்பில், சிறை பறவை, ரஜினிகாந்த் நடிப்பில் ஊர்காவலன், சத்யராஜ் நடிப்பில் மல்லு வேட்டி மைனர் உள்ளிட்ட பலபடங்களை இயக்கியுள்ளார். கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு வெளியான நைனா என்ற படத்தை இயக்கியிருந்த மனோபாலா உதவி இயக்குனராக இருக்கும்போதே படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அதன்பிறகு கடந்த 1998-ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் நட்புக்காக படத்தில் மதுர என்ற கேரக்டரில் முழு நீள கேரக்டரில் நடித்த மனோபாலா தொடர்ந்து பல படங்களில் முக்கிய காமெடி நடிகராக நடித்துள்ளார். குறிப்பாக கலகலப்பு, அரண்மனை, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் இவரின் காமெடி பெரிதாக பேசப்பட்டது. கடைசியாக சமீபததில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோஷ்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வடபழனியில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மனோபாலாவின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் இதுவரை 40க்கு மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள மனோபாலா 16 தொலைக்காட்சி தொடர்கள், 3 தொலைக்காட்சி படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மனோபாலா பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“