2002-ம் ஆண்டு டூமச் என்ற படத்தின் மூலம் திரைரயுலகில் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து 2003-ம் அன்பு என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமான இவர், காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலியாக உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாத பாலா மலையாள சினிமாவில் என்ட்ரி ஆனார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த பாலா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அஜித் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அவரின் 4 தம்பிகளில் ஒருவராக பாலா நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தின் இயக்குனர் சிவா பாலாவின் சகோதரர். அதனைத் தொடர்ந்து தம்பி, ரஜினியுடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்த பாலா சமீபத்தில் மலையாளத்தில் வெளியாக ஷபிக்கண்டே சந்தோஷம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான சமயத்தில் சம்பள பிரச்சனை தொடர்பான பேசி பாலா சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் பாலா கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்பியின் உடல்நலம் குறித்த விசாரிக்க அண்ணன் சிறுத்தை சிவா மருத்துவமனை சென்றுள்ளார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடும் பாலா, இன்னும் இரண்டு அல்லது 3 நாட்களில் எனக்கு பெரிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் நான் இங்கு இருக்கிறேன். இந்த அறுவை சிகிச்சையின் போது மரணம் கூட நேரிடலாம். அதே சமயம் உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது.
நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இன்று எங்களது 2-வது திருமண நாள். என் மனைவி எலிசபெத் இந்த நாளை கொண்டாட விரும்பினார். பிறப்போ இறப்போ கடவுள் முடிவு செய்வார் என்று கூறும் பாலா, தனது மனைவியிடம் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அடுத்து நீ ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளாதே டாக்டரை திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு அமிர்தா சுரேஷ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு டாக்டராக எலிசபெத் உதயன் என்பவரை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil