நடிகர், பத்திரிக்கையாளர், யூடியூபர் என்று வலம் வரும் பயில்வான் ரங்கநாதன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளின் திருமணத்தை எளிமையாக நடத்திய நிலையில், இந்த திருமணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமான பயில்வான் ரங்கநாதன், கடந்த சில வருங்களாக யூடியூப் சேனலிகளில், நடிகைகள் குறித்து பேசி வருகிறார். இவரின் பேச்சு பலமுறை சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், நடிகை ரேகா நாயர், பயில்வானுடன் மெரினாவில் கடும் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. ஆனால் பயில்வான் தொடர்ந்து தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஷகீலாவுடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பயில்வான், நடிகைகள் குறித்து பேசுவது தொடர்பான கேள்விக்கு, அவர்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளில் அவர்கள் கூறிய தகவல்களை தான் நான் தொகுத்து சொல்கிறேன் என்றும் கூறியிருந்தார். அதன்பிறகு நீங்களும் பொது வாழ்க்கையில் இருக்கிறீர்கள். உங்கள் மகள் பற்றி பேசலாமா? உங்கள் மகள் வேறொரு பெண்ணை காதலிக்கிறார் என்று ஷகீலா சொல்ல, என் பொண்ணை பற்றி பேசினால் நாக்கு அழுகிவிடும் என்று பயில்வான் கூறியிருந்தார். இந்த நேர்காணல் நடந்து சில தினங்களில், பயில்வான் தனது மகளின் நிச்சயதார்த்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
எனது மகள் குறித்து ஒரு நடிகை தவறாக பேசிவிட்டார். அவர் பெயரை சொல்ல கூட நான் விரும்பவில்லை. அவரது பேச்சால், எனது குடும்பத்தினர் மிகவும் வருத்தப்பட்டார்கள். இதனால் மகள் திருமணத்தை சீக்கிரம் முடிக்க முடிவு செய்தோம். மாப்பிள்ளை எனது மனைவியின் அண்ணன் மகன்தான். அவர் எம்.பி.ஏ முடித்துள்ளார். எனது மகள் பி.காம் முடித்துள்ளார். இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர் என்று பயில்வான் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 14-ந் தேதி பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் பழனியப்பன் இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றது தொடர்பான புகைப்படத்தை பயில்வான் ரங்கநாதன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“