தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனு மீது நீதமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உங்களுக்காக இல்லை என்றாலும் பிள்ளைகளுக்காவது இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் இவரும் பிரிவதில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் தனி வீடு கட்டிய தனுஷ் தனது அப்பா அம்மாவுடன் அங்கு குடியேறினார்.
தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதேபோல் தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கிய ஐஸ்வர்யா அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அதே சமயம் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறி இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்த்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், தங்களது திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், இருவரும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் நான்காவது முறையாக நடத்த விசாரணையில், இருவரும் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் நீதிமன்ற அறைக்குள் வைத்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியதை தொடர்ந்து, இந்த வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தீர்ப்பு வழங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“