கடந்த 2022-ம் ஆண்டு தங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்த நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தற்போது சட்டப்பூர்வமாக விவாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் கடந்த 2022-ம் ஆண்டு தாங்கள் இருவரும் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர்.
தனுஷ் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒன்றாக வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்புக்கு பின் இவர்கள் இருவருமே தங்களது சொந்த வேலையில் தீவிரம் காட்டினர். ஐஸ்வர்யா தனது அடுத்த படத்திற்காக வேலையில் பிஸியான நிலையில், தனுஷ் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தனது 50-வது படமான ராயன் படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதேபோல் லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக ரீ-என்டரி கொடுத்த ஐஸ்வர்யா தற்போது தனது அடுத்தப்பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே தனுஷ் ரஜினிகாந்த் வீடு இருக்கும் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டி குடியேறியுள்ளார், விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தாலும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே தங்களது மகன்களுடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இதனிடையே மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து 2 ஆண்டுகள் கழித்து தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சட்டப்பூர்வமாக பிரிய சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். பரஸ்பர விவாகரத்து கோரியுள்ளதால், நீதிமன்றத்தில் எவ்வித சண்டையோ, அல்லது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது போன்ற எந்த நிகழ்வுகளும், நடக்கப்போவதில்லை. இருவரும் இனி ஒன்றாக இருக்க முடியாது என்பதால் பிரிவது என்று முடிவு செய்துள்ளனர். இருவருமே ஒருவருக்கு ஒருவர் மரியாதையானவர்கள் என்பதால் இணக்கமாக நடைபெறும்.
இருவரும் வாழ்க்கையில் பிரிந்தாலும், தங்கள் மகன்களுக்கு சிறந்த பெற்றோர்களாக இருப்பார்கள். மேலும் மகன்கள் யாராவது ஒருவரது பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தால், ஐஸ்வர்யாவின் பாதுகாப்பில் தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தனுஷ் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விவாகரத்து செயல்முறை சுமூகமாக முடிய இருவருமே ஒத்துழைக்க விரும்புகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"