தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தங்களது மகன் என்று கூறி வரும் மதுரையை சேர்ந்த தம்பதிக்கு நடிகர் தனுஷ் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதில் தன்னை தங்களது மகன் என்று உரிமை கோருவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கூறி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வழக்கு விசாரணையின் போது பலமுறை தனுஷ் தங்களது மகன் என்று தம்பதியினர் ஊடகங்களில் கூறி வந்தனர். ஆனால் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனாலும் இயக்குனர் கஸ்தூரி ராஜா தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்பித்து உத்தரவுகளை பெற்றதாகவும் கூறி தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு பதில் தரும் விதமாக தனுஷ் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா சார்பில், வழக்கறிஞர் எஸ் ஹாஜா மொஹிதீன் கிஸ்தி, மதுரை தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசில்,
"எனது வாடிக்கையாளர்கள் மீது இனிமேல் மீது பொய்யான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறு உங்கள் இருவரையும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன். இணங்கத் தவறினால், எனது வாடிக்கையாளர்கள் நீதிமன்றங்களை அணுகி இது சம்பந்தமாக தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், உங்களைத் தடுக்கவும் தடை நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அவர்கள் மீது பொய்யான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியதற்காக மற்றும் அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியதற்காக உங்கள் இருவர் மீதும் வழக்கு தொடரப்படும்" என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தனுஷும் அவரது தந்தையும் தாங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு குறித்து பத்திரிக்கை அறிக்கை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். அவ்வாறு செய்யத் தவறினால், நற்பெயரை கலங்கப்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.10 கோடி தரவேண்டும் என்றும் அவதூறு வழக்கை சந்திக்க நேரிடும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“