சமீபத்தில் வெளியான நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியது தொடர்பான நடிகர் தனுஷ் அனுப்பிய நோட்டீஸ்க்கு பதில் நயன்தாரா பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டது. இதில், தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா விஜய் சேதுபதி இணைந்து நடித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நானும் ரவுடி தான் படத்தை தயாரித்த தனுஷ் தனது அனுமதி இல்லாமல் இந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்திவிட்டதாக கூறி ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால் அதிர்ச்சியான நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தனுஷ் குறித்து கடுமையான விமர்சனங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில்,தனுஷ் தன் மீதும், தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனிப்பட்ட வெறுப்பு கொண்டதாக கூறியிருந்தார்.
மேலும், நானும் ரவுடி தான் படத்தின் பாடல்களைப் பயன்படுத்த தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த அறிக்கைக்கு தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதில் அறிக்கையும் வெளியாகவில்லை. இதனிடையே ஆவணப்படத்தில் அனுமதி இன்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் தனுஷ் தாக்கல் செய்த மனு மற்றும் அவர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“