துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து எந்த நடிகரின் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அவர் தனுஷின் 56-வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, தனு் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து மாரி செல்வராஜ் முன்னணி இயக்குனரின் வரிசையில் இடம் பிடித்தார். அதன்பிறகு அரசியல் கதை களத்தில் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார்.
வடிவேலு, பகத் பாசில், உதயநிதி கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தனது 4-வது படமாக, தான் வாழ்க்கையில் சந்தித்த ஒரு விபத்தை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருந்தார். சிறு பட்ஜெட்டில் தயாரான இந்த படம் பெரிய வசூலை குவிந்த நிலையில், கடுமையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கபடி விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மாரி செல்வராஜ் தனது அடுத்தப்படமாக தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் படத்திற்கு தற்காலிகமாக டி56 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இட்லி கடை மற்றும் இந்தி படத்தில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் இந்த படங்களை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.