தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோர் என் மீது எழுப்பிய புகாரை தீர்ப்பதற்கு உதவிய நடிகர் சங்கத்திற்கு என் நன்றி என்று நடிகரும் இயக்குனருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ள நிலையில், அவ்வப்போது இவரை பற்றிய சர்ச்சை கருத்துக்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோரிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு தனுஷ் கால்ஷீட் கொடுக்கவில்லை என்று என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், நடிகர் தனுஷ்க்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்யும் தயாரிப்பாளர்கள் எங்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடிகர்கள் சங்கம் தனுஷ்க்கு ஆதரவாக களமிறங்கியது.
சமீபத்தில் நடைபெற்ற, நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் தனுஷ் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, தேனாண்டாள் பிலிம்ஸ்-க்கு கால்ஷீட் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட தனுஷ், பைவ் ஸ்டார் கதிரேசன் கொடுத்த முன்பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனுஷ்க்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த ரெட் கார்டை நீக்கி அவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தது. இதனிடையே தன் மீதான புகார்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவிய நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக தனுஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் தலையீடு, நேர்மையான வழிகாட்டுதல்கள், சவால்களை சமாளிக்கவும், பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் உதவியது.
நடிகர்கள் சங்கம் நடத்திய முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். நடிகர் சங்கத்தின் உதவியால் கடந்த 11-ந் தேதி எங்கள் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நல்ல விதமாக தொடங்க முடிந்தது. என் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், உறுதுணையாக இருந்த நடிகர் சங்கத்திற்கு நன்றி. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், தொழில்துறைக்கு நேர்மையான முன்னுதாரணத்தை அமைத்துள்ளது, நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும், முன்னெடுப்புகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“