தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் நாளை (பிப் 21) வெளியாக உள்ள நிலையில், இந்த படம் குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர், என பன்முக திறமை கொண்ட தனுஷ், ராயன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பவிஷ், அனிகா சுரேந்தர், பிரியா பிரகாஷ் வாரியர். சரத்குமார், சரண்யா பொண்வண்ணன், ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தனுஷே இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில், அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ராயன் என்ற கேங்ஸ்டர் படத்தை கொடுத்த தனுஷ், அடுத்த படமே இப்படி காதல் படத்தை கொடுத்திருக்கிறாரே என்று பலரும் ஆச்சிரியமாக கேட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
படத்தின் இயக்குனரான தனுஷ், இதுவரை எந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றாத நிலையில், நாளை படம் வெளியாக உள்ளதால், படம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், ராயன் படத்திற்கு பிறகு நான் இயக்கிய பம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். படம் நாளை ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தை இயக்கும்போது எந்த அளவிற்கு உற்சாகத்தை கொடுத்ததோ அதேபோல ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்துள்ள இளம் நடிகர்கள் அனைவரும் படத்தின் வெற்றியை எதிர்நோக்கி கண்களில் கனவுகளுடன் அவர்களின் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் நிறைவேற தான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். அவர்களின் இடத்தில் தானும் ஒரு காலத்தில் இருந்திருக்கேன். அவர்களின் ஃபீல் என்ன என்று எனக்கும் தெரியும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,