80-களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா குறித்து நடிகரும் இயக்குனருமான ஜி.எம்.குமார் கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள படங்களில் அறிமுகமான வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், முன்னணி நடிகர்களின் படங்களில், கவர்ச்சி நடனம் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சில்க் ஸ்மிதா.
இதனிடையே கடந்த 1996-ம் ஆண்டு தனது 35-வது வயதில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார். 28 ஆண்டுகள் கடந்திருந்தாலும், தற்போதுவரை சில்க் ஸ்மிதா குறித்து நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என திரையுலகினர் பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகரும் இயக்குனருமான ஜி.எம்.குமார் பேசியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாண்டியராஜன், இயக்கிய கன்னிராசி, கமல்ஹாசன் நடித்த காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றி 1986-ம் ஆண்டு வெளியான அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். தொடர்ந்து பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பல படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சில்க் ஸ்மிதா போன்ற ஒரு தங்கமான பெண்ணை பார்க்க முடியாது. அவர் ஒரு நல்ல டிசரியான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் பல்லவியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். இல்லை என்றால் நானே சில்க் ஸ்மிதாவை காதலித்திருப்பேன் என்று கூறியுள்ளார். ஜி.எம்.குமாரின் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“