தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரவி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாக பழம்பெரும் நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினமாவில் கவுண்டமணி செந்தில் காமெடியில் கலக்கி கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இணையாக காமெடியில் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனகராஜ். 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜனகராஜ், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ரஜினி கமல் முதல் புதுமுக நடிகர்கள் வரை பலருடன் இணைந்து காமெடியில் கலக்கிய ஜனகராஜ் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜனகராஜ், 80 ல் தொடங்கி 90-களின் இறுதிவரை பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனாலும், ஜனகராஜ் தற்போது சென்னையில் தான் இருக்கிறார், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் நான் அமெரிக்காவிற்கே போனது இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு விசாவே கிடையாது. போகாத ஒரு நாட்டுக்கு நான் போனதாக சொல்கிறார்கள். இது பற்றி எத்தனை பேருக்கு விளக்கம் கொடுக்க முடியும்.
நான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்று சொல்வதால், எனக்கான சினிமா வாய்ப்பும் வராமல் போகிறது. அதேபோல் நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ரஜினி சார் என்னை வந்து பார்த்ததாகவும், சொல்கிறார்கள். இதெல்லாம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இதையெல்லாம் கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. கொரோனா வந்ததிலிருந்து எனக்கு ஒரே அழுத்தம், மன உளைச்சலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக கோவிட் முடிந்தது. அதற்கு பிறகும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
இப்போது என்னால் என்னுடைய சிரிப்பை சிரிக்க முடியாது. நடிக்கும் போது அது வந்துவிடும். இப்போது நான் ஒல்லியாக தான் இருக்கிறேன். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். முதலில் 90 கிலோ இருந்தேன் இப்போது நான் 64 கிலோவாக குறைந்து இருக்கிறேன். என் மனைவி தான் என்னை ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறார். என் மகன் நல்லா பார்த்துக் கொள்வான். எனக்கு ஒரே ஒரு மகன். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“