தனது மனைவியை பிரிவதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி இது தொடர்பான சென்னை குடும்பல நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜோடி ஜெயம்ரவி ஆர்த்தி. மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த ஜெயம்ரவி, அதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார்.
அதேபோல், ஜெயம் ரவி ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அவரை என்னால் சந்திக்கவும் முடியவில்லை. குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று அவரது மனைவி ஆர்த்தி கூறியிருந்தார். இதனிடையே ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது பொருட்களை மீட்டு தரக்கோரி, காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே தற்போது ஆர்த்தி, தான் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தான் ஜெயம்ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான அவரை தனியாக சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து ஆர்த்தி தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம்ரவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“