தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தனது நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கடந்த சில ஆண்டுகளாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க தடுமாறி வருகிறார். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஜெயம் ரவிக்கு கடந்த தற்போது வரை வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில், ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி, இறைவன், அகிலன், சைரன் உள்ளிட்ட படங்கள் கடுமையாக விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. தற்போது ப்ரதர், மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வரும் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
ஜெயம் ரவி எப்போது வெற்றிப்படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது ஷாக்காக இருந்தாலும், அடுத்து வரும் படங்களுக்காக காத்திருக்கின்றனர். இதனிடையே நாளை (செப்டம்பர் 10) ஜெயம்ரவி பிறந்த நாள் என்பதால் அவரது நடிப்பில் கவனம் ஈர்த்த டாப் 7 படங்களின் வரிசையை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜெயம் (2003)
மோகன்ராஜா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜெயம்ரவி, சதா இணைந்து நடித்திருந்தனர். கோபிசந்த் வில்லனாக நடித்த இந்த படம் காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம்ரவிக்கு முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)
ஜெயம்ரவி குத்துச்சண்டை வீரராக நடித்திருந்த இந்த படத்தில், நதியா பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அசின் நாயகியாக அறிமுகமான இந்த படமும் காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், 2-வது படத்திலேயே குத்துச்சண்டை வீரராக ஜெயம்ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். விவேக் இந்த படத்தில் காமெடியில் அசத்தியிருந்தார்.
உனக்கும் எனக்கும் (2006)
ஜெயம் ரவி – த்ரிஷா இணைந்து நடித்த இந்த படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். காதலுக்காக விவசாயம் பார்க்கும் ஹீரோ இறுதியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சந்தோஷ் சுப்பிரமணியம் (2008)
ஜெயம் ரவி – ஜெனிலியா இணைந்து நடித்த இந்த படத்தில் சந்தானம், பிரகாஷ்ராஜ், ஆகியோருடன் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அப்பாவின் பிடியில் இருந்து வெளியில் வர துடிக்கும் ஒரு இளைஞரின் முயற்சியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம்ரவி – ஜெனிலியா ஆகியோரின் கெமிஸ்ட்ரி பாராட்டுக்களை பெற்றிருந்தது.
பேராண்மை (2009)
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜெயம்ரவியுடன் பொன்வண்ணன், வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதையான இந்த படத்தில், இந்தியாவில் ஏவுகணையை அறிக்க வரும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் சதியில் இருந்து நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்து. காட்டு இலக்கா அதிகாரியாக ஜெயம்ரவி சிறப்பாப நடித்திருந்தார்.
தனி ஒருவன் (2015)
ஜெயம்ரவி நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அநீதி செய்யும் வில்லனை எதிர்த்து போராடும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் ஜெயம்ரவி. அவரின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த தனி ஒருவன் படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோமாளி (2019)
90-க் குழந்தைகளுக்கும் 2கே குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் வித்தயாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த கோமாளி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. ஜெயம்ரவி காஜல் அகர்வால் இணைந்து நடித்த இந்த படத்தில் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தற்போதுவரை ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கடைசி வெற்றிப்படம் இதுதான்.
மேலும் ஜெயம்ரவி திருநங்கையாக நடித்த ஆதிபகவான், சமூகத்தின் மீது அக்கரை உள்ள இளைஞராக நடித்த நிமிர்ந்து நில், குத்துச்சண்டை வீரராக நடித்த பூலோகம், வின்வெளி வீரராக நடித்த டிக், டிக், டிக் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.