தன்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்று அழையுங்கள் என்று புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நடிகர் ரவி, கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்ட அவர், அடுத்து எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம்தூம், தில்லாலங்கடி, பேராண்மை என பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு கோமாளி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த ஜெயம்ரவி, அதன்பிறகு நடித்த எந்த படங்களும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரதர் படம் கூட அவருக்கு கைகொடுக்காத நிலையில், சமீபத்தில் தனது மனைவியை விவாரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜெயம்ரவி தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது.
தற்போது, ஜீனி, படத்தில் நடித்து வரும் ஜெயம்ரவி, தனது 34-வது படத்தில் கமிட் ஆகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் எஸ்.கே.25 படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம்,நாளை (ஜனவரி 14) வெளியாக உள்ள நிலையில்? ஜெயம்ரவி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தன்னை இனிமேல் ஜெயம்ரவி என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ரவி அல்லது ரவி மோகன் என்று அழையுங்கள் என்று கூறியுள்ள அவர், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தை தொடங்கியுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார். போகிப்பண்டிகையான இன்று, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதனை தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரவி மோகன் மாற்றம் ஏன் என்பது குறித்து கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“