Jayam Ravi Aarthi Divorce: ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக அதிகரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ரவி. எடிட்டர் மோகனின் மகனான இவர், முதல் படம் பெரிய வெற்றி பெற்றதால், அந்த படத்தின் டைட்டிலை தனது பெயருடன் இணைத்துக்கொண்டு ஜெயம் ரவி என்ற பெயரில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ஜெயம் படத்திற்கு பிறகு இவர் நடித்த எம்.குமரன், தாஸ், மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி உள்ளிட்ட சில படங்கள் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களாக இருந்தாலும், ஜெயம்ரவிக்கு தமிழில் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. குறிப்பாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை திரைப்படம் ஜெயம்ரவிக்கு திருப்புமுனையை கொடுத்தது.
பேராண்மை படத்தில், காட்டு இலக்கா அதிகாரியாக நடித்திருந்த இவர், அடுத்து தனி ஒருவன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து முத்திரை பதித்திருந்தார். ஜெயம்ரவியின் திரை வாழ்க்கையில் தனி ஒருவன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு சில வெற்றிப்படங்களை கொடுத்த ஜெயம்ரவி கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படம் கொடுக்க தடுமாறி வருகிறார். கடைசியாக இவர் நடித்த பூமி, அகிலன், இறைவன், சைரன் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது.
தற்போது, பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதற்கு ஜெயம்ரவி எவ்வித பதிலும் சொல்லாத நிலையில், தற்போது தனது மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், இது கனமான ஒரு முடிவு. என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எனது மற்றும் என்னை சார்ந்தவர்கிளின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பரை திருமணம் செய்துகொண்ட ஜெயம்ரவிக்கு, இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் அவரது மகன் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“