தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தனது மனவைி ஆர்த்தியை பிரிவதாக நேற்று (செப்டம்பர் 09) அறிவித்த நிலையில், இன்று விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தொடர்ந்து எம்.குமரன், தாஸ், மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி உள்ளிட்ட ரீமேக் படங்களில் நடித்த இவர், அடுத்து பேரான்மை என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார்.
அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து முத்திரை பதித்திருந்தார். ஜெயம்ரவியின் திரை வாழ்க்கையில் தனி ஒருவன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பல வெற்றிகளை கொடுத்திருந்தாலும், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடித்த பூமி, அகிலன், இறைவன், சைரன் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது.
தற்போது, பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, நேற்று (செப்டம்பர் 09) தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்த அவர், இது கனமான ஒரு முடிவு. என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எனது மற்றும் என்னை சார்ந்தவர்கிளின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே தனது பிறந்த நாளான இன்று, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கடந்த 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயம் ரவி தாக்கல் செய்துள்ள இந்த மனு வரும் அக்டோபர் 10-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“