நடிகர் சங்கத்தின் சட்ட விதிகளை மீறியதாக கூறி நடிகர் பாக்யராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
அதன்பிறகு பலகட்ட விசாரணைக்கு பின் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற நடிகர் சங்கதேர்தலின் வாங்கு எண்ணிக்கையில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர்.
இதனிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள நடிகர் சங்க நிர்வாகம் நடிகர் சங்க தேர்தல் குறித்து பாக்யராஜ் அவதூராக பேசி வருவதாகவும், இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உறுப்பினர்கள் பலர் கடிதம் அனுப்பி வருவதாகவும் கூறிய நடிகர் சங்க நிர்வாகம் உங்களை ஏன் சங்கத்தை விட்டு நீக்க கூடாது என்பது குறித்து விளககம் கேட்டு பாக்யராஜூக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேபோல் நடிகர் ஏ.எல்.உதயாவுக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், செய்தி வாயிலாகவோ அல்லது கடிதங்கள் வாயிலாகவோ சங்க உறுப்பினர்களிடம் கருத்து சொல்லக்கூடாது என்ற நடிகர் சங்க விதியை மீறியதாக கூறி பாக்யராஜ் மற்றும் உதயா ஆகிய இருவரும் 6 மாதத்திற்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil