/indian-express-tamil/media/media_files/2025/06/03/zvsOhwTsZf0yT8SaVFqX.jpg)
தக் லைப் படத்தின் ப்ரமோஷன் பணிக்காக கர்நாடகா சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிரிந்து சென்றது தான் கன்னடம் என்று கூறியது பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கமல்ஹாசன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கமல்ஹாசன், 37 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள படம் தக் லைப். சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோருடன் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளது, இந்த படம் வருமு் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த வாரம் தக் லைப் படத்தின் ப்ரமோஷனுக்காக, கர்நாடகா சென்றிருந்த கமல்ஹாசன், தமிழில் இருந்து பிரிந்து சென்றது தான் கன்னட மொழி என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கமல்ஹாசன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், தக் லைப் திரைப்படத்தில் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
அதே சமயம், தனது கருத்தில் எந்த தவறும் இல்லை, அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்திருந்தார், இதனிடையே, கமல்ஹாசன் கருத்தை கண்டிக்கும் வகையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், அம்மாநில முதல்வர் சித்தாராமையாவும், இந்த அறிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
இதனிடையே தக் லைப் படத்தை வெளியிட கோரி கர்நாடக உயர்நீதின்றத்தில், நடிகர் கமல்ஹாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "எந்தவொரு குடிமகனுக்கும் உணர்வுகளைப் புண்படுத்த உரிமை இல்லை. நீர், நிலம், மொழி இந்த மூன்று விஷயங்களும் குடிமக்களுக்கு முக்கியம். மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. நீங்கள் அதைக் குறைத்து மதிப்பிட்டு ஏதோ சொல்லியிருக்கிறீர்கள். தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள். நீங்கள் வரலாற்று ஆசிரியரா அல்லது மொழியில் வல்லுநரா?. மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.
தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள கமல்ஹாசன், கர்நாடக வர்த்தக சபைக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், சிவராஜ் குமாரை வரவேற்பதற்காக கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நோக்கத்திலேயே பேசினேன். அதில் கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எந்த எண்ணமும் கிடையாது. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ, விவாதமோ கிடையாது.
கன்னட மக்களின் மொழி மீதான அன்பின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட அத்தனை மொழிகளின் மீதான பந்தம் உணர்வுப்பூர்வமானது. நான் சினிமாவின் மொழியை அறிவேன். சினிமா எப்போதும் அன்பையும், பிணைப்பையும் மட்டுமே கொடுக்கும். என் மீதான அன்பினால் மட்டுமே சிவராஜ் குமார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதற்காக சிவராஜ் குமார் சங்கடங்களையும், நெருக்கடியையும் அனுபவிக்க நேர்ந்தது வருத்தம் அளிக்கிறது.
எங்கள் இடையில் உண்மையான அன்பும், மரியாதையும் எப்போதும் இருக்கும். சினிமா மக்களுக்கு இடையிலான பாலமான இருக்க வேண்டுமே தவிர, அது மக்கள் பிரிக்கும் சுவராக இருக்க கூடாது. அதுதான் என் நோக்கமும். பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு ஒருபோதும் இடம் கொடுத்தது இல்லை. இப்போதும் இடம் கொடுக்க விரும்பவில்லை. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.