வயதான நடன கலைஞர்களை மீண்டும் சினிமாவில் டான்ஸ் ஆட யாரும் கூப்பிட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக அபூர்வ சகோதரர்கள் தனியாக 2 பாடல் காட்சிகள் படமாக்கினோம் என்று நடிகர் கமல்ஹாசன், கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல புதுமையாக டெக்னாலஜிகளை அறிமுகம் செய்தவர் கமல்ஹாசன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஜெமினி கணேசன், சாவித்ரி நடிப்பில் வெளியான களத்தூர் கண்ணம்மா படம் தான் கமல்ஹாசன் திரைத்துறையில் அறிமுகமான முதல் படம்.
அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த கமல்ஹாசன், வளர்ந்தபின், பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். ஜெய்சங்கர் நாயகனாக நடித்த மாணவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த கமல்ஹாசன், அன்னை வேளாங்கன்னி படத்தில் சிலுவையில் அறையும் ஏசு கேரக்டரில் நடித்திருந்தார். 1972-ம் ஆண்டு வெளியான குறத்தி மகன் திரைப்படத்தில், ஹீரோவின் அண்ணன் கேரக்டரில் நடித்திருப்பார்.
1974-ம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான கன்னியாகுமரி திரைப்படம் தான் கமல்ஹாசன் ஹீரோவாக அறிமுகமான முதல் படம். அடுத்து விஷ்ணு விஜயம் என்ற படத்தில் நடித்திருந்த கமல், தமிழிலும் பல படங்களில் 2-வது நாயகனாக நடிக்க தொடங்கினார். அந்த வகையில் 1973-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் அரங்கேற்றம் படத்தில் நடித்த கமல்ஹாசன், அதன்பிறகு தமிழிலும் நாயகனாக நடிக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் சினிமாவில் தொடாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளார்.
தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சமயத்தில், உதவி நடன இயக்குனராக பணியாற்றிய கமல்ஹாசன், 1971-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான நூற்றுக்கு நூறு படம் தொடங்கி, 1974-ல் இந்தியில் வெளியான ஐனா படம் வரை பல படங்களில் உதவி நடன இயக்குனராக இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், 16 வயதில் நான் டான்ஸ் உதவியாளர். என்னை விட 2 மடங்கு வயதானவர்களுக்கு எல்லாம் நான் ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்திருக்கிறேன்.
அவர்களும் முகம் சுழிக்காமல் நான் சொல்வதை கேட்டுக்கொள்வார்கள். நான் பணியாற்றிய படங்களில் பழைய டான்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயதாகிவிட்டால் திரும்பவும் டான்ஸ் ஆட கூப்பிடமாட்டார்கள். குறிப்பாக டிஸ்கோ டான்ஸ் என்றால் அவர்களை அழைக்கவே மாட்டார்கள். அவர்களுக்காவே அபூர்வ சகோதரர்கள் படத்தில் அண்ணாத்த ஆடுறார் பாடலை எடுத்தோம். அந்த படத்தில் .இதேபோல் மற்றொரு பாடலும் எடுத்தோம். அவர்களை பார்த்தால் இப்படி ஆடுவார்களா என்று தெரியாது. ஆனால் ஆடினால் தெரியும்.
அது எங்கள் குடும்பம், டான்சர்ஸ் என்றால் எங்கே யார் என்று திரும்பி பார்க்க தோன்றும். பரமக்குடி என்று சொன்னது போல ஒரு ஃபீலிங் என்று கமல்ஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார்.