மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், இதற்காக காரணம் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் நடித்த நடிகை மேனகாவின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், 2013-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி ஸ்கொயர், சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இவரின் படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில், கீர்த்திக்கு வாய்ப்புகள் குறை தொடங்கியது.
ஆனாலும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். அந்த வகையில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்தில் சாவித்ரியா நடித்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு, சாவித்ரியே மீண்டும் வந்துவிட்டார் என்பது போல் இருந்ததாக பலரும் பாராட்டிய நிலையில், இந்த படத்திற்காக தேசிய விருதை வென்றார் கீர்த்தி சுரேஷ்.
இதன் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் தொடந்து பல படங்களில் நடித்து வந்தார். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தசரா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது, அதன்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான உதயநிதியின் மாமன்னன் படத்தில் லீலாவதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கேரக்டர் தேவையில்லாதது என்று விமர்கர்கள் பலரும் கூறியிருந்தனர். இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், கீர்த்தி சுரேஷ் மிகவும் புத்திசாலியான பெண், அழகு மட்டும் இருக்க கூடாது, அறிவும் இரக்க வேண்டும். இது கீர்த்தி சுரேஷ்க்கு இருக்கிறது என்று கூறியிருந்தார். கீர்த்தி சுரேஷ் குறித்து கமலின் இந்த பாராட்டு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
கமலின் பாராட்டு குறித்து பேசிய சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறுகையில், கீர்த்தி சுரேஷ் இயல்பாகவே கவிஞர். மலையாளத்தில் சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய கவிதை பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. எழுத்து மட்டுமின்றி சிறுகதைகளும் படிக்கும் பழககம் உள்ள ஜெயலலிதா போல் படத்தின் ஷாட்டுக்கு இடையில் புத்தகங்கள் படிப்பார். இதையெல்லாம் தெரிந்துதான் கமல்ஹாசன் அவரை பாராட்டியிருப்பார என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“