பெண் பார்க்க போன இடத்தில், அந்த பெண் அசிங்கமாக சொன்ன ஒரு வார்த்தையால், நான் இவ்வளவு பெரிய நடிகனாக உயர முடிந்தது என்று நடிகர் குமரி முத்து உணர்வுப்பூர்வமாக பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக திகழ்ந்தவர் குமரி முத்து. 1940-ம் ஆண்டு பிறந்த இவர், 1980-ம் ஆண்டு தனது 40-வயதில், காளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, ஊமை விழிகள், மனைவி ரெடி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் மகேந்திரன், பாலுமகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து பிரபலமான குமரி முத்து தனது வித்தியாசமான சிரிப்புக்கு பெயர் பெற்றவர். இவர் சிரிப்பு சத்தத்தை வைத்தே இவரை அடையாளம் காணும் அளவுக்கு வித்தியாசமான திறமைசாளியாக இருந்த குமரி முத்து ரஜினிகாந்த் தொடங்கி, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான வில்லு படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும். காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்திருந்த குமரி முத்து, தான் நடிகனாக மாறிய சூழல் எப்படி வந்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் ஒரு பெண் பார்க்க போனேன். பெண்ணை எனக்கு பிடித்திருந்தது. பெண் என்னை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். மற்றவர்கள் மாப்பிள்ளைக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று கேட்டுள்ளனர்.
அப்போது அந்த பெண், எங்க அவனை பிடிச்சிருக்கு, அவன் வடக்க பார்க்கிற மாதிரி தெற்கே பார்க்கிறான். எங்கியோ பார்க்கிற மாதிரி என்னை பார்க்கிறான். நான் இவனை கட்டிக்கிட்டு என்ன இழவு கொட்ட என்று கேட்டுள்ளார். அந்த பெண் கேட்ட அந்த ஒரு வார்த்தை என்னை இவ்வளவு பெரிய இடத்தில் வந்து உட்கார வைத்துள்ளது, அதனால் தான் சொல்கிறேன் வார்த்தைகளை மட்டும் பார்த்து பேச வேண்டும் ஒரு சொல் வாழ வைக்கும். ஒரு மனிதனை தாழ்த்தும். அதனால் அந்த பெண் சொன்ன அசிங்கமான வார்த்தை என்னை இவ்வளவு பெரிய சினிமா நடிகனாக 728 திரைப்படத்தில் நடித்த குமரி முத்துவாக உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“