scorecardresearch

நடிகர் மயில்சாமி மரணம் குறித்த வதந்தி… மகன்கள் கொடுத்த விளக்கம் என்ன?

முன்னணி காமெடி நடிகராக உயர்ந்த மயில்சாமி விவேக்குடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக தனது திறமையை நிரூபித்துள்ளார்.

நடிகர் மயில்சாமி மரணம் குறித்த வதந்தி… மகன்கள் கொடுத்த விளக்கம் என்ன?

நடிகர் மயில்சாமியின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், அவரது மகன்கள் இருவரும் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் மயில்சாமியின் மரணம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு பாக்யாராஜ் இயக்கத்தில் வெளியான தாவனி கணவுகள் என்ற படத்தில் கூட்டத்தில் ஒருவராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய மயில்சாமி, தொடர்ந்து, கன்னிராசி, வெற்றி விழா பணக்காரன், சின்னக்கவுண்டர், உழைப்பாளி உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு முன்னணி காமெடி நடிகராக உயர்ந்த மயில்சாமி விவேக்குடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக தனது திறமையை நிரூபித்துள்ளார். இதில் பாளையத்து அம்மன் என்ற படத்தில் விவேக் மயில்சாமி இருவரும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பது போல் வரும் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த பிப்18-ந் தேதி சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் கோவிலுக்கு சென்ற மயில்சாமி அடுத்தநாள் அதிகாலை வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்ககுகள் நடைபெற்ற நிலையில், மயில்சாமி மரணம் குறித்து இணையதளங்களில் பல பொய்யான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனிடையே தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள மயில்சாமியின் மகன்கள் இணையதளத்தில் வெளியாகி வரும் பொய்யான தகவல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து பேசியுள்ள அவரது மகன், சிவராத்திரி அன்று நான் அம்மா அப்பா மூவரும் கேளம்பாக்கம் கோவிலுக்கு சென்று அங்கு ட்ரம்ஸ் சிவமணியுடன் கோவிலில் பாடல் பாடி சிவராத்தியை சிறப்பித்தோம்.

அதன்பிறகு அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்தோம். அப்போது பசிக்கிறது எதாவது சாப்பிட்டால் நல்லாருக்கும் என்று சொன்னார். அதன்பிறகு அவருக்கு சமைத்து கொடுத்தேன். சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்தில் சாப்பாடு நெஞ்சிலே இருக்கிறது என்று சொன்னார். அவர் சாப்பிட்டவுடன் எப்போதும் ஹாட் வாட்டர் குடிப்பார். அதன்படி அப்போது அவருக்கு ஹாட் வாட்டர் கொடுத்தேன். குடித்துவிட்டு நான் படுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்றுவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் அப்பா மூச்சு விட கஷ்டமா இருக்கு என்று சொல்வதாக அம்மா சொன்னாங்க. அதன்பிறகு ஹாஸ்பிடல் போகலம் என்று அப்பாவை காரில் அழைத்துக்கொண்டு கிளம்பினேன். சிறிது தூரம் சென்றதும் அப்பா என் மீது சாய்ந்துவிட்டார். இதனால் காரை பார்க்கிங்கில் போட்டுவிட்டு ஆட்டோவில் அப்பாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றேன்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். ஆனாலும் அவர் கோமாவில்தான் இருப்பார் என்று மனதை தேற்றிக்கொண்டு போரூர் ராமச்சந்திர மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கேயும் அப்பா இறந்துவிட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு தான் வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்தோம்.

ஆனால் அப்பா திருவண்ணாமலை சென்றாபோது மயங்கி விழுந்துவிட்டார். கேளம்பாக்கம் கோவிலிலேயே இறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை. நான் இப்போது சொன்னது தான் உண்மை என்று கூறியுள்ளார்.

மேலும் எங்கள் அப்பா விட்டு போன தர்மத்தை நாங்கள் தொடருவோம். எங்க அப்பா எப்போவும் சொல்வார் தர்மம் இருக்கும் இடத்தில் எம்.ஜி.ஆர் இருப்பார் என்று. அதே நாங்கள் சொல்கிறோம் தர்மம் இருக்கும் இடத்தில் எம்.ஜி.ஆர் எங்க அப்பா விவேக் சார் எல்லாரும் இருப்பார்கள். அப்பா போன் எப்போவும் சுவிட்ச் ஆப் ஆகாது. ஒரு நம்பரை நானும் இன்னொரு நம்பரை என் தம்பியும் பயன்படுத்த உள்ளோம் நீங்கள் எந்த உதவியாக இருந்தாலும் அந்த நம்பரை அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor mayilsamy death rumour his sons press meet