தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு பாக்யாராஜ் இயக்கத்தில் வெளியான தாவனி கணவுகள் என்ற படத்தில் கூட்டத்தில் ஒருவராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய மயில்சாமி, தொடர்ந்து, கன்னிராசி, வெற்றி விழா பணக்காரன், சின்னக்கவுண்டர், உழைப்பாளி உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
Advertisment
அதன்பிறகு முன்னணி காமெடி நடிகராக உயர்ந்த மயில்சாமி விவேக்குடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக தனது திறமையை நிரூபித்துள்ளார். இதில் பாளையத்து அம்மன் என்ற படத்தில் விவேக் மயில்சாமி இருவரும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பது போல் வரும் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காமெடி மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள மயில்சாமி, கவலை வேண்டாம் படத்தில் நடிகர் ஜீவாவின் அப்பாவாக நடித்திருப்பார். தனது காமெடியின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மயில்சாமி கடைசியாக உடன்பால் என்ற படத்தில் நடித்திருந்தார். படங்கள் மட்டுமல்லாமல் டிவி சீரியல் ரியாலிட்டி ஷோக்களிலும் வந்துள்ள மயில்சாமி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.
கடந்த 18-ந் தேதி சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் கோவிலில் விடியும் வரை கண் விழித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பிய மயில்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, அவரைப்’போலவே மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். தான் கஷ்டப்பட்டாவது பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் கொண்ட மயில்சாமி சென்னை வெள்ளத்தின்போது தனி ஆளாக பலருக்கு உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், மயில்சாமி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil