தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து அவருடன் பணியாற்றிய பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் அவரது காலத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்தபோதிலும் அரசியலில் கால்பதித்த அவர், திமுகவில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா இறந்த பிறகு தனி கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார்.
தற்போது எம்.ஜி.ஆர் இல்லை என்றாலும் அவருடன் பணியாற்றிய அல்லது அவர் வாழ்த காலத்தில் இருந்த கலைஞர்கள் பலரும் எம்.ஜி.ஆர் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன இயக்குனர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் நடிக்க வந்த நடிகைகள் நடன பயிற்றி பெற்றிருக்கமாட்டார்கள். ஆனால் சொல்லிக்கொடுத்தால் உடனடியாக புரிந்துகொள்வார்கள். நான் அவர்களுக்கு எப்படி ஆட வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பேன். தனியாக ஆடும்போது அவர்கள் சிறப்பாக ஆடினாலும் எம்.ஜி.ஆருடன் ஆடும்போது கூச்சம் காரணமாக ஷாட் சரியாக வராது. அவர்களும் சரியாக ஆடமாட்டார்கள்.
இதனால் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்த எம்.ஜி.ஆர் நீ ஹீரோ அவ ஹீரோயின் நீ பேசும்போது அவள் வெட்கப்பட்டு உன்னை கட்டிப்பிடிக்க வேண்டும். அப்போது அவர்களிடத்தில் இருக்கும் கூச்சம் போய்விடும். மனசார கட்டிப்பிடித்து ஆடுவதற்கும், சொல்லிக்கொடுத்து கட்டி பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு குழந்தை இருக்கு எனறால் அதை எப்படி கொஞ்சுவியோ அப்படி என்னை கொஞ்ச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அவர்களின் கூச்சத்தை போக்கினேன். இது எம்.ஜி.ஆர் சொன்ன ஐடியா என்று கூறியுள்ளார்.
ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது பாடல்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டான்ஸ் ஆடி முடித்தவுடன், அனைவரும் ரூமுக்கு வந்துவிட்டோம். அப்போது அனைவரையும் அழைத்த எம்.ஜி.ஆர், ஒரு பெரிய ரவுண்ட் டேபிளில் அனைவரையும் அமர வைத்தார். இந்த குரூப்பில் இயக்குனர் ஸ்ரீதரும் இருக்கிறார். டம்ளரில் அனைவருக்கும் பால் பாயாசம் கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு அதிக பாயாசம் யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு நான் ஒரு பெரிய பரிசு கொடுப்பேன் அது யார் என்று பார்ப்போம் என எம்.ஜி.ஆர் கூறினார். இதை கேட்ட அனைவரும் பால்பாயாசத்தை குடிக்க தொடங்கினர். இந்த போட்டியில் எம்.ஜி.ஆரும் கலந்துகொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் குடிக்க முடியாமல் வாந்தி எடுக்க தொடங்கிவிட்டோம். ஆனால் எம்.ஜி.ஆர். மட்டும் தொடர்ந்து குடித்தக்கொண்டே இருந்தார்.
எங்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம். இவர் மட்டும் எப்படி குடித்துக்கொண்டே இருக்கிறார் என்று யோசித்தோம். அப்போது அவர் நீங்கள் எல்லோரும் தோற்றுவிட்டீர்கள். அதனால் உங்களுக்கு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். ஆனால் அவர் எப்படி பாயாசம் குடித்தார் என்பதை தெரிந்துகொள்ள அவரது டம்ளரை பார்த்தேன்.
அப்போதுதான் தெரிந்தது. வெளியில் பார்க்க டம்ளர் மாதிரி இருந்தாலும் உள்ளே ஒரு ஸ்பூன் பாயாசம் இருக்கும் அளவுக்குதான் இருந்தது. இதனால் தான் அவர் தொடர்ந்து பாயாசம் குடித்துக்கொண்டே இருந்தார் என்று கண்டுபிடித்தேன். அதன்பிறகு அவரிடம் சென்று அண்ணா நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். அதனால் நீங்கள் பரிசு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று சொன்னேன். அதற்கொன்ன கொடுத்துவிடலாம் என்று விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னார்.
இவர் வைத்த இந்த போட்டியினால் அனைவரும் பாயாசம் குடித்து வாந்தி எடுத்துக்கொண்டு கிடந்தோம். அதனால் அடுத்தநாள் ஷூட்டிங் நடக்கவே இல்லை. இயக்குனர் ஸ்ரீதரும் இதில் அடங்குவார். அதற்கு அடுத்த நாள் ஷூட்டிங் போகும்போது சந்தோஷமான முடித்தோம் என்று புலியூர் சரோஜா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“