தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்றுள்ள எம்.ஜி.ஆர் முதல் படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், அதன்பிறகு போலீ்ஸ் கேரக்டரை ஏற்க மறுத்துள்ளார்.
நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ஆங்கில இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய இந்த படத்தில் எம்.கே.ராதா நாயகனாக நடித்த நிலையில், அவரது அப்பா கந்தசாமி முதலியார் படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், எம்.ஜி.ஆருக்கு அதன்பிறகு படவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அடுத்த வாய்ப்பு கிடைக்குமா என்று சினிமா கம்பெனிகளில் எம்.ஜி.ஆர் அவரது அண்ணன் சக்கரபாணி ஆகிய இருவரும் சென்று வந்துள்ளனர். ஆனால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் இருவரும் முயற்சி செய்து வந்துள்ளனர்.
இந்த முயற்சியில், சதிலீலாவதி படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமி முதலியாரையும் அவரின் வீட்டில் சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது ஒருநாள் எம்.கே.ராதா அடுத்து ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார் கந்தசாமி முதலியார்.
அதன்படி சமூக தொண்டன் என்று பெயரிட்ட அந்த படத்தில் வாய்ப்பு வாங்கி தர எம்.ஜி.ஆரை அழைத்துக்கொண்டு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்றுள்ளார் கந்தசாமி முதலியார். எம்.ஜி.ஆரை அறிமுகம் செய்து வைக்க, அங்கு அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க பணமும், அக்ரிமெண்ட சைன் பண்ண டாக்குமெண்ட்ஸ்சும் இருக்கிறது. அப்போது எம்.ஜி.ஆர் என்ன வேடம் என்று கேட்க, துப்பறியும் போலீஸ் அதிகாரி என்று சொல்ல, எம்.ஜி.ஆர் அதிர்ச்சியாகியுள்ளார்.
முதல் படத்திலேயே துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்தோம். இந்த படத்திலும் போலீஸ் வேடத்தில் நடித்தால், நாம் போலீஸ் வேடத்தில் நடிக்க தான் சரியான ஆள் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று யோசித்த எம்.ஜி.ஆர் அந்த வாய்ப்பை ஏற்க தயக்கம் காட்டிய நிலையில், கந்தசாமி முதலியார் தைரியமாக நடி பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனாலும் அப்போது எம்.ஜி.ஆர் வறுமையில் இருந்தாலும், மனது சொல்வதை கேட்டு அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.
தனது மறுப்பை வெளிப்படையாக சொல்லாத எம்.ஜி.ஆர், அம்மாவிடம் கேட்டுவிட்டு சொல்வதாக கூறுகிறார். அதன்பிறகு இருவரும் வெளியில் வந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது, கே.பி.கேசவன் என்ற ஒருவர் வருகிறார். அவர் வந்து விசாரிக்க, எதோ போய்க்கொண்டு இருக்கிறது என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதன்பிறகு அவர் ஒரு புதுப்பட வாய்ப்பு சொல்ல, எம்.ஜி.ஆர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“