ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள மோகன்லால் தனது கேரக்டர் என்ன என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியது தொடர்பான தகவல் இணயைத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ஜெயிலர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெரப், சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இதனிடையே ஜெயிலர் படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நிலையில், படத்தின் ஷோகேஸில் (டிரெய்லர்) மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் தமன்னா கேரக்டர்கள் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஒரு வித சந்தேகத்தை எழுப்பிய நிலையில், இயக்குனர் இந்த கேரக்டர்களை சஸ்பென்ஸாக வைத்துள்ளார் என்று கூறப்பட்டது.
இதனிடையே சமீபத்திய பேட்டியில் நடிகர் மோகன்லால் தனது கேரக்டர் குறித்து பேசியுள்ளார். ஒரு சுவாரஸ்யமாக படத்தில் முக்கயத்துவம் வாய்ந்த சுவாரஸ்யமான கேரக்டரில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ள மோகன்லால், பெரிய திரையில் ரசிகர்களை திகைக்க வைக்க விரும்புவதால், படம் வெளியாகும்வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் சுனில், ஜாக்கி ஷெராப், விநாயகன் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளது ஷோகேஸில் தெரியவந்துள்ள நிலையில், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகிய இருவரும் என்ன மாதிரியான கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்சார் துறையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள ஜெயிலர் படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்று கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் ஜெயிலர் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களும் படத்திற்காக காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“