/indian-express-tamil/media/media_files/2025/09/25/ms-baskar-in-vijay-2025-09-25-19-11-21.jpg)
கேப்டன் விஜயகாந்த் தனக்கு தாய் போன்றவர் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நேற்று தேசிய விருது வாங்கிய நிலையில், இன்று கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில், அந்த விருதை வைத்து ஆசி பெற்றார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் வெகு சில நடிகர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.பாஸ்கர். ஆரம்பத்தில் சின்னத்திரையில் கலக்கிய இவர், தற்போது வெள்ளித்திரையில், கேரக்டர் நடிகராக கலக்கி வருகிறார். ஆனால் இவர் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு இன்னும் வலுவான கேரக்டர்கள் இவருக்கு அமையவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் இன்றும் கூறிக்கொண்டு வருகிறார்கள்
இதனிடையே, கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த பார்க்கிங் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது எம்.எஸ்.பாஸ்கருக்கு அறிவிக்கப்பட்டது. இது தமிழ் சினிமாவில் அவருக்கு தாமதமாக கிடைத்த விருது என்று பலரும் கூறி வந்தனர். இதனிடையே நேற்று டெல்லியில் குடியாரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற விழாவில், எம்.எஸ்.பாஸ்கருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அவருடன் சேர்ந்து இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் விருதுகளை வாங்கினர்.
இந்நிலையில், நேற்று ஜனாதிபதி கையால் தேசிய விருது வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் இன்று, தனது தாய், அண்ணன் என்று அவர் சொல்லிக்கொள்ளும் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் விருதை வைத்து ஆசி பெற்றுக்கொண்டார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் தேசிய விருதுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு சென்ற எம்.எஸ்.பாஸ்கர் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு ஆசி பெற்றார்.
விஜயகாந்துடன், தர்மபுரி, எங்கள் அண்ணா, கஜேந்திரா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் 8 தோட்டாக்கள், துப்பாக்கி முணை உள்ளிட்ட பல படங்களில் கேரக்டர் நடிகராக முத்திரை பதித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், தூய தமிழிலும், சென்னை பாஷையிலும் சரளமாக பேசகக்கூடியவர். மேலும் பல ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து அசத்தியவர். இவரது மகளும் டப்பிங் கலைஞராக இருக்கும் நிலையில், இவரது மகன் 96 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.