திரைத்துறையில் காமெடி அம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். இன்றைக்கு திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருப்பதாக, சினிமா ரசிகர்கள் கூறி வந்தாலும், ஒரு முழுநீள காமெடி திரைப்படம் எப்போது வரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் காமெடி செய்த பல நடிகர்கள் ஹீரோவாக மாறிவிட்டதால் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், இன்றைய காலக்கட்டங்களில் வெளியாகும் படங்கள் திரையரங்குகளில் ஒரு வாரம் தாக்குபிடித்தாலே பெரிய விஷயம் என்ற நிலை வந்துவிட்டது. இதனால், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாத சமயத்தில், முன்னணி நடிகர்களின் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ரசிகர்களை காமெடியில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விஜயின் கில்லி, சச்சின் உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றது. இந்த இரு படங்களிலும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக சொல்லப்போனால், சச்சின் படத்தின் முழுநீள திரைக்கதையும் காமெடியை அடிப்படையாக வைத்து தான் அமைத்திருப்பார்கள். அந்த வகையில் படம் முழுக்க காமெடியில் அசத்திய படம் தான் சுந்தரா டிராவல்ஸ். மறைந்த நடிகர் முரளி, வடிவேலு, ராதா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை தாஹா என்பவர் இயக்கியிருந்தார்.
மலையாளத்தில் கடந்த 2001-ம் ஆண்டு திலீப், நடிப்பில் வெளியான ஈ பறக்கும் தளிகா என்ற படத்தின் தமிழ் ரீமெக்காக வெளியான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிது. காமெடி பஞ்சம் காரணமாக கஷ்டப்படும் தமிழ் ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் வகையில் தற்போது சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ரீ-ரிலீஸ் உரிமையை, சிவபெருமான் என்பவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம், மே மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் முரளி இன்னும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள நிலையில், சுந்தரா டிராவல்ஸ் படத்தின் ரீ-ரிலீஸ் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.