தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் திரையுலகில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக விடா முயற்சி படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
1990-ம் ஆண்டு தமிழில் வெளியானி என் கணவர் என் வீடு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அஜித். சுரேஷ், நதியா இணைந்து நடித்த இந்த படத்தில், ஒரு சிறிய கேரக்டரில் அஜித் நடித்திருந்தார். அதன்பிறகு, 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். செல்வா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார்.
அமராவதி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து, ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த அஜித், கல்லூரி வாசல் படத்தில் நடிகர் பிரஷாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. 1995-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
ஆசை படத்திற்கு பின், முன்னணி நடிகராக மாறிய அஜித் அடுத்து, ராசி, காதல் மன்னன், காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, அமர்களம் உள்ளிட்ட பல காதல் படங்களை கொடுத்திருந்தார். இதில் 2001-ம் ஆண்டு வெளியான தீனா படம் அஜித்தை ஒரு அதிரடி நாயகாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது, இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட் அஜித், தொடர்ந்து பல அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
கடந்த 2023-ம் ஆண்டு துணிவு படம் வெளியான நிலையில், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே அஜித் திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்த 32 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக விடா முயற்சி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும், யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடா முயற்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தல 32 என்று கொண்டாடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“