/indian-express-tamil/media/media_files/2025/07/31/sivaji-mgr-2025-07-31-17-16-06.jpg)
சினிமாவில் அள்ளிக்கொடுத்து சிவந்த கை என்றால் எம்.ஜி.ஆரைத்தான் சொல்வோம். அந்த அளவிற்கு பலருக்கும் உதவி செய்துள்ள எம்.ஜி.ஆரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நடிகர் பாண்டு செய்த ஒரு முயற்சி அவருக்கே வினையாக முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் பாண்டு. எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக இருந்த இடிச்சப்புளி செல்வராஜ் என்பவரின் தம்பியான இவர், மிகச்சிறந்த ஓவியர். 1947-ம் ஆண்டு பிறந்த இவர், 1970-ம் ஆண்டு வெளியான ஜெயசங்கரின் மாணவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு எம்.ஜி.ஆருடன் சிரித்து வாழ வேண்டும், படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் முதல்வராகிவிட்டதால், சினிமாவில் இருந்து விலகிய நிலையில், பாண்டு, மற்ற இயக்குனர்களில் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், பணக்காரன், சின்ன தம்பி, விஜயின் நாளைய தீர்ப்பு, நாட்டாமை, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் காமெடி கேரக்டரில் நடித்த அனைத்து படங்களும் பெரிய பெற்றிப்படங்களாக அமைந்து இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
சினிமாவில் காமெடி கேரக்டரில் நடித்து வந்தாலும், நிஜவாழ்க்கைளில் மிகச்சிறந்த ஓவியராக இருந்த பாண்டு, எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய 1973-ம் ஆண்டு, ஒரே இரவில் அ.தி.மு.க கொடியை வடிவமைத்துள்ளார். அதேபோல், உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக போஸ்டர் அடிக்க முடியாத நிலை இருந்தபோது அந்த படத்திற்காக ஸ்டிக்கர் ஒட்டும் ஐடியா கொடுத்து அதற்கான பணிகளையும் செய்து முடித்தவர் தான் பாண்டு. கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் பாண்டு மரணமடைந்தார்.
எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளர், ரசிகராக இருந்த பாண்டு, எம்.ஜி.ஆர் 100 சிவாஜிக்கு சமம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவில் பேசியுள்ள அவர், எனக்கு எம்.ஜி.ஆர் மட்டும் தான் தெரியும் சிவாஜி யார் என்று தெரியாது. ஆனால் 100 சிவாஜிக்கு சமமானவர் தான் ஒரு எம்.ஜி.ஆர். குமுதத்தில் ஒரு ரெவிலியூஷன் பண்ண வேண்டும் என்று நினைத்து, சிவாஜியின் 100 போட்டோக்களை வெட்டி, அதில் எம்.ஜி.ஆர் உருவம் தெரிவது போல் வரைந்தேன். இதை கிட்ட வைத்து பார்த்தால் சிவாஜியும் தூரத்தில் வைத்து பார்த்தால் எம்.ஜி.ஆரும் தெரிவார்கள்.
இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர், ரசிகர்கள் பாராட்ட, சிவாஜி ரசிகர்கள் என்னை திட்டி தீர்த்துவிட்டார்கள். இதை பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர் எனது அண்ணனிடம் சொல்லி, மறுநாள் ராமாவரம் தோட்டத்திற்கு வர சொன்னார். எம்.ஜி.ஆர் பாராட்டுவார், 2-3 செயின் நமக்கு கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு சென்றேன். அங்கு சென்றவுடன் என்னை சாப்பிட சொன்னார். சாப்பிட்டு முடித்தவுடன், அண்ணன் என்னை எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றார். இதை செய்தது நீதானா என்று கேட்க நான் ஆமாம் என்று சொன்னேன்.
அவர் பாராட்டப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் இது தப்பு என்று சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவரை இழிவு செய்து, தாழ்த்தி வேறொரு படம் பண்ணி பெயர் வாங்க கூடாது. யார் மனதையும் புண்படுத்தால் இதை செய்திருந்தால் சரி. இந்த படம் வந்திருக்கும் குமுதம் புக்கை சிவாஜி கணேசன் பார்க்கும்போது அவர் மனது என்ன பாடுபடும் என்று நினைத்து பார்த்தாயா என்று கேட்டார். எனக்கு அது தோன்றவே இல்லை. இனிமேல் இந்த மாதிரி பண்ணாத போ என்று சொல்லிவிட்டார் என பாண்டு கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.