சிறைவாசிகளுக்காக நடிகர் பார்த்திபன் மடிப்பிச்சை எடுத்த நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் என்று தேடினால் உடனடியாக நினைவுக்கு வருபவர் பார்த்தீபன். 90-களில் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகரான அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். வித்தியாசமான படங்களை இயக்கி பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்தது.
சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படம் பார்த்திபனுக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. இயக்கத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் பார்த்திபன் வாழ்க்கையிலும் அவ்வப்போது வித்தியாசமாக எதையாவது செய்துகொண்டிருப்பார். அந்த வகையில் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக அவர் புத்தகத்தை மடிப்பிச்சையாக கேட்ட நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
46-வது சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியை தொடங்கிவைத்தார். புத்தக பிரியர்களுக்காக நடத்தப்படும் இந்த கண்காட்சியில் தள்ளுபடி விலையில் விற்கப்படும் புத்தகங்களை பலர் வாங்கிச்செல்வார்கள். இந்த வகையில் 1000 கணக்கில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று வந்த நடிகரும் இயக்குனருமாக பார்த்திபன், சிறைவாசிகளுக்காக புத்தகத்தை மடிப்பிச்சையாக கேட்டு ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகங்களை சேகரித்துள்ளார். இந்த புத்தகங்கள் அனைத்தையும் கூண்டுக்குள் வானம் என்ற அரங்கில் கொண்டு சேர்த்துள்ளார். சிறைவாசிகளுக்காக பார்த்திபன் செய்த இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பாராட்டக்களை பெற்று வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“