மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் பொது மேடையில் சக ஹீரோ ஒருவரின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த பெருமைக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆர், தற்போது இல்லை என்றாலும் இன்றைய தலைமுறையினரும் அவரின் சாதனைகள் மற்றும் அவரின் ஆட்சி குறித்து தெரிந்துகொள்ளும் அவர்க்கு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறார்.
1935-ம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் நாயகனாக உயர்ந்தார். அதன்பிறகு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் அங்கிருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை உருவாக்கினார்.
கட்சி தொடங்கியது முதல் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவரின் பெருமை மற்றும் ஆளுமை திறன் இன்றும் படித்து ரசிக்கக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. இவ்வளவு பெருமை கொண்ட எம்.ஜி.ஆர் பொதுமேடையில் சக ஹீரோ ஒருவரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் அவ்வாறு நடந்துள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஒரு பொதுமேடையில் மக்கள் கூடியிருக்க சக ஹீரோ ஒருவரின் காலில் விழுந்து வணங்கினார். ஒரு நாட்டின் முதல்வர் சக மனிதனின் காலில் விழலாமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திகைப்பில் இருந்தனர்.

இதனால் இந்த நிகழ்வு குறித்து எம்.ஜி.ஆர் விளக்கம் அளித்திருந்தார். பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வெள்ளி விழா கூட்டம் நடைபெற்றது. மேடையில் எம்.ஜி.ஆர். கவர்னர், அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் மற்றும் தமிழகத்தில் சிறப்புமிக்க கலை மேதைகள் செம்மாங்குடி சீனிவாச ஐயர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி தேவி, பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா, திருமழலை கோவிந்தராஜ பிள்ளை, மற்றும் பலர் இருந்தனர்.
இந்த விழாவில் திரைப்பட விருதுகளை வழங்கி வந்த எம்.ஜி.ஆர். பழம்பெரும் நடிகர் சந்திரலேகா படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதாவுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு சட்டென்று அவரது காலில் விழுந்து வணங்கினார். இதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தாலும் கைத்தட்டல்கள் குறையவில்லை. அதன்பிறகு பேசிய எம்.ஜி.ஆர் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
இதில், 1938-ம் ஆண்டு நான் கல்கத்தாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோதுதான் செம்மாங்குடி சீனிவாச ஐயரின் இசைக்கச்சேரியை கேட்டேன். அந்த கச்சேரிக்கு என்னை அழைத்து சென்றவர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. இன்று 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றேன். மகாராஜபுரம் கிருஷ்ண மூர்த்தி எனது நண்பர்.
எம்.கே.ராதா அண்ணன் காலை தொட்டு நான் வணங்கியபோது நீங்கள் கைதட்டி ஆராவாரம் செய்தீர்கள். ஒரு முதல்வர் இப்படி செய்யலாமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அண்ணன் ராதா அவர்களிடத்தில் அவரது தந்தை கந்தசாமி முதலியாரை என் நடிப்புலக ஆசானை காண்கின்றேன். அதனால் தான் வணங்கினேன். அதுவும் நான் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற முறையில் தான் வணங்கினேன்.
எம்,கே.ராதா என்னை சிறிய வயதில் உடன்பிறந்த சகோதரனாக பார்த்தக்கொண்டார். ஒரு நாடக ஒத்திகையில் நான் சரியாக நடிக்கவில்லை என்பதற்காக என் நடிப்புலக ஆசான் கந்தசாமி முதலியார் ஓங்கி அறைந்துவிட்டார். அப்போது அண்ணன் ராதா எனக்காக அவர் தந்தையிடம் சண்டையிட்டார். இப்போதும் அந்த சம்பவம் என் கண்முன் இருக்கிறது. என் அண்ணன் என்ற முறையில் தான் அவரை வணங்கினேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“